Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆயுத பூஜையையொட்டி தொடர் விடுமுறை குமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: ஆயுத பூஜையையொட்டி தொடர் விடுமுறை வருவதால் குமரி மாவட்டத்தில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆயுதபூஜை விழா தொழில்களைச் சார்ந்த கருவிகளுக்கும், கல்வியைச் சார்ந்த புத்தகங்களுக்கும், போர் தொடர்பான ஆயுதங்களுக்கும் வணக்கம் செலுத்தும் பண்டிகையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும், குறிப்பாக விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரும் இந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை காலம் மிகப் பெரிய மக்கள் இடம்பெயர்வு நிகழ்வுகளாகும். ஊரகப்பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக நகரங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள், பண்டிகை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புகிறார்கள். இந்த பண்டிகை நடப்பு ஆண்டில் அக்டோபர் 1 அன்று நடைபெறுகிறது.

குமரி மாவட்டம் பண்டிகை நாட்களில் மக்கள் அதிகம் பயணம் செய்யும் பகுதிகளில் ஒன்றாகும். எனவே இந்த ஆண்டும் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆயுத பூஜை கொண்டாட்டங்களின்போது நகரங்களில் வசிக்கும் மக்கள், சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு, தனியார் ஊழியர்கள் விடுமுறையை பயன்படுத்தி பயணிக்கிறார்கள்.

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி வழியாக குமரி மாவட்டத்திற்குச் செல்லும் ரயில்களில் கூடுதல் நெரிசல் ஏற்படுகிறது. பொதுவாக தெற்கு ரயில்வே மற்றும் தென் மத்திய ரயில்வே ஆகியவை ஆண்டுதோறும் ‘பூஜை சிறப்பு ரயில்கள்’ என்ற பெயரில் கூடுதல் சேவைகளை அறிவித்து வருகின்றன. இதன் நோக்கம் அதிகப்படியான பயணிகளைச் சமாளிப்பது மட்டுமல்லாமல், தனியார் பஸ் மற்றும் பிற போக்குவரத்து துறைகளின் கட்டணச் சுரண்டலைத் தடுப்பதும் ஆகும்.

2024ம் ஆண்டில் ரயில்வே 150க்கும் மேற்பட்ட பூஜை சிறப்பு ரயில்களை இயக்கின. இதில், சென்னை, மதுரை, கன்னியாகுமரி, ஹைதராபாத், போன்ற பல வழித்தடங்கள் இடம் பெற்றன. தற்போதைய அறிவிப்புகளின் படி, 2025ம் ஆண்டிற்கான ஆயுதபூஜை கால சிறப்பு ரயில்கள் தொடர்பான முழுமையான பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே சென்னை எக்ஸ்பிரஸ் சேவைகள், நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு நீட்டிக்கப்பட வேண்டும், மதுரையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி தினசரி சேவைகள் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

ஹைதராபாத்- கன்னியாகுமரி சிறப்பு ரயில் தென் மத்திய ரயில்வே இயக்கும் இந்த சேவை, கடந்த ஆண்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நீட்டிக்கப்பட்டது போலவே இந்த ஆண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் இருந்து திருவனந்தபுரம் வழியாக கூடுதல் சேவைகள் இயக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை போன்ற இடங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கிறார்கள். அரசு பஸ்கள் மற்றும் தனியார் பேருந்துகள் மட்டும் போதுமானதாக இருக்காது. கன்னியாகுமரி மாவட்டம் ஒரு முக்கிய சுற்றுலா மையம். பண்டிகை நாட்களில் இந்தியா முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதால் கூடுதல் ரயில் தேவை ஏற்படுகிறது.

அக்ேடாபர் 1ம் தேதி புதன்கிழமை ஆயுத பூஜை, 2ம் தேதி வியாழக்கிழமை விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறை ஆகும். அந்த வகையில் 3ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்தால் அடுத்த சனி, ஞாயிறு என்று ஐந்து நாட்கள் வரை விடுமுறையை கொண்டாட இயலும் என்பதால் பலரும் சொந்த ஊர்களுக்கு வர தயாராகி வருகின்றனர். எனவே முன்பதிவு வசதியுடன் கூடுதல் ரயில்கள், நள்ளிரவு நேரங்களிலும் இயக்கப்படும் ரயில்கள், கூடுதல் பெட்டிகள், சலுகை கட்டணத்துடன் வசதியான சேவைகள் போன்ற எதிர்பார்ப்புகள் மக்களிடம் உள்ளது.