Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆளுங்கட்சிக்கு பின்னடைவு எதிரொலி; ஜப்பானின் அடுத்த பிரதமர் பெண்? களத்தில் இளம் தலைவரும் போட்டி

டோக்கியோ: ஜப்பானின் ஆளும் கட்சியில் ஏற்பட்டுள்ள போட்டியில், நாட்டின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்புள்ள வேட்பாளருக்கும், இளம் சீர்திருத்தவாதிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி) நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர் பின்னடைவுகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஷிகேரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுபவரே ஜப்பானின் அடுத்த பிரதமராகப் பதவியேற்பார். இதில், நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறும் வாய்ப்புடன் சனே டகாயிச்சியும் (64), முன்னிலையில் உள்ளார். போருக்குப் பிந்தைய ஜப்பானின் மிக இளம் வயது பிரதமராகும் வாய்ப்புடன் மிதவாத சீர்திருத்தவாதியான ஷின்ஜிரோ கொய்சுமியும் (44) முன்னணியில் உள்ளனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர ஆதரவாளரான சனே டகாயிச்சி, வலுவான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை முன்னிறுத்துகிறார். இவர் சர்ச்சைக்குரிய யாசுகுனி ஆலயத்திற்கு அடிக்கடி செல்வது அண்டை நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும். அதே சமயம், முன்னாள் பிரதமர் ஜூனிசிரோ கொய்சுமியின் மகனான ஷின்ஜிரோ, அரசியலில் சீர்திருத்தம், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் போன்ற வாக்குறுதிகளை அளித்து, இளைய வாக்காளர்களைக் கவர முயற்சிக்கிறார். ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளதால், புதிய பிரதமருக்கு சட்டங்களை நிறைவேற்றுவது, அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, மக்கள்தொகை நெருக்கடியைச் சமாளிப்பது என பல்வேறு பெரும் சவால்கள் காத்திருக்கின்றன.