Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தீர்வு கிடைக்குமா?

தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி வழக்கம்போல் இம்முறையும் தமிழகத்திற்கு நாங்கள் நிதியை அள்ளி அள்ளி தருகிறோம் என்கிற கோணத்தில் பேசிவிட்டு சென்றுள்ளார். ஆனால் தமிழகத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய நிதியை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம். வெள்ள நிவாரண நிதி தொடங்கி கல்வி நிதி வரை பலமுறை கேட்டு கேட்டு தமிழகம் சலிப்படைய தொடங்கிவிட்டது என்பதே உண்மை.

இந்நிலையில் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடியிடம் தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த மனு, அமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் வழங்கப்பட்டுள்ளது. இம்மனுவில் தமிழகத்தின் தேவைகள், எதிர்பார்ப்புகள் அனைத்துமே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதியை தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திடவில்லை என்ற ஒரே காரணத்திற்காக ஒன்றிய அரசு இன்னமும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கையை தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களும் கூட ஏற்க தயாராக இல்லை.

தமிழகத்திற்கான கல்வி நிதி வழங்கப்படாத காரணத்தால் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் எதிர்கால படிப்பு பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கல்வி அமைப்பில் காணப்படும் 2.20 லட்சம் ஆசிரியர்கள், 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களும் இதனால் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பிஎம்ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே கல்வி நிதியை ஒதுக்குவோம் என ஒன்றிய அரசு உத்தரவிடுவது ஜனநாயக கொள்கைகளுக்கு விரோதமானதாகும். தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட ரயில்பாதை திட்டங்கள் கூட இன்னமும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. திண்டிவனம் - செஞ்சி, மதுரை - தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய ரயில்பாதை திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்துவது நல்லது. கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளும் செயல்பாட்டுக்கு வருவதில் தாமதம் நீடிக்கிறது.

இலங்கை கடற்படையின் தாக்குதல் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழக மீனவர்களின் படகுகளையும் அடிக்கடி சிறைபிடித்து கொள்கின்றனர். மீனவர்களையும், மீன்பிடி உபகரணங்களை மீட்க ஒன்றிய அரசு இன்று வரை நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியவில்லை. பிரதமர் மோடி தனது நேரடி கவனத்தை செலுத்தினால், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விரைவில் மீட்க முடியும்.

ஒன்றிய அரசின் 2018-19ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்காக தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேசத்தில் 2 பாதுகாப்பு தொழில்துறை பெருவழிச்சாலைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளும் இல்லை. சேலம் உருக்காலையில் உள்ள பயன்படுத்தப்படாத நிலத்தை கொண்டு பாதுகாப்பு தொழில் பெருவழிச்சாலைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தமிழகத்தின் உணர்வுகளுக்கும், மக்களின் நலன்களுக்கும் பிரதமர் மதிப்பளிப்பதாக இருந்தால், தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ஏற்று, பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்கிட வேண்டும். பொத்தாம் பொதுவாக அத்தனை கோடி, இத்தனை கோடி நிதி என பிரதமர் இனிமேல் பட்டியலிடாமல், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை இவற்றையெல்லாம் நிறைவேற்றி தந்துள்ளோம் என பேச்சில் தெரிவித்தால், மக்கள் மத்தியில் நன்மதிப்பை வருங்காலத்திலாவது பெற முடியும்.