போலீசார் எதிர்பார்ப்பு
பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரத்தில் காவலர்கள் குடியிருப்புகள் கட்டப்படாததால் வாடகை வீட்டில் வசிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளூரில் போலீசாருக்கு வீடு தர உரிமையாளர்கள் பலர் மறுப்பதால் வெளியூரில் இருந்து வேலைக்கு வர வேண்டிய நிலை உள்ளது. பணி மாறுதலாகி வருவோர் காவல்நிலையத்திலேயே தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே காவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் முக்கிய பகுதியாக பாவூர்சத்திரம் விளங்குகிறது. இவ்வூரை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் நிறைந்துள்ளது. இங்கு விவசாயம் மற்றும் பீடிச்சுற்றும் தொழில் பிரதானமாகும். கடந்த 1973ம் ஆண்டு பாவூர்சத்திரத்தில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இக்காவல் நிலையத்திற்கு எல்கையான வடக்கு கோட்டையூர், தெற்கு எல்லைப்புளி, கிழக்கு வட்டாலூர், மேற்கு ராமச்சந்திரப்பட்டணம் வரை உள்ள பகுதியாகும்.
தொடக்க காலத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த இந்த காவல் நிலையம் ஆரம்பத்தில் தென்காசி காவல் ஆய்வாளர் சரகத்திற்குட்பட்டு காவல் நிலையமாக இயங்கி வந்தது. தொடக்கத்தில் இந்த காவல் நிலையத்தில் 10 முதல் 15 காவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். பின்னர் பாவூர்சத்திரம் காவல் நிலையம் தரம் படிப்படியாக உயர்த்தப்பட்டது. கடந்த 2003ம் ஆண்டு பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் செல்லும் வழியில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்காவல் நிலையத்தில் 40 காவலர்கள் பணியில் இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது இன்பெக்ஸ்டர் (பொ) 1, சப்-இன்ஸ்பெக்டர் 2, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் 4, தலைமை காவலர்கள் 17, 2ம் நிலை காவலர்கள் 7 உட்பட 31 காவலர்கள் பணியில் இருந்து வருகின்றனர். இவர்கள் பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு கோயில் திருவிழாக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். முக்கிய திருவிழாவான வென்னிமலை ஸ்ரீசுப்பிரமணிசுவாமி கோயில் மாசித்திருவிழா, மடத்தூர் ஸ்ரீமுருகன் கோயில் மாசித்திரு விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
விழாவிற்கு பக்தர்கள் கூட்டம் லட்சக்கணக்கில் கூடுவதால் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது போலீசாருக்கு போதும், போதும் என்ற நிலை ஏற்படும். அப்போது கூடுதல் காவலர்களை மாவட்ட எஸ்பியிடம் கேட்டுப் பெறுவது வழக்கம் ஆகும். தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் இப்பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. தற்போது நான்கு வழிச்சாலையில் நான்கு முனை சந்திப்பில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை சரி செய்ய போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் பாவூர்சத்திரம் காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படி 24 மணி நேரமும் பணியில் இருக்கும் காவலர்களுக்கு பாவூர்சத்திரத்தில் காவலர் குடியிருப்பு ஏதும் கிடையாது. அனைத்து காவலர்களும் வாடகை வீட்டில் தான் தங்கியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர், எஸ்பியிடம் பாவூர்சத்திரம் காவல் துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை காவலர்கள் குடியிருப்புகள் கட்டப்படவில்லை.
இதனால் அவர்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். உள்ளூரில் வீடு தர மறுப்பதால் போலீசார் பலர் வெளியூர்களில் இருந்து வேலைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பணி மாறுதலாகி வருவோர் வீட்டிற்கு பல நாட்களாக அலைய வேண்டியிருப்பதால் சில நேரங்களில் அவர்கள் காவல் நிலையத்திலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே காவலர்கள் குடியிருப்பு கட்டுவதற்கு பாவூர்சத்திரம்-கடையம் ரோட்டில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் காலியிடம் உள்ளது. ஏற்கனவே இந்த வளாகத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூட கிட்டங்கிகள், இலங்கை அகதிகள் முகாம், வேளாண்மை விரிவாக்க மையம் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு காவலர் குடியிருப்பு கட்டுவதற்கு ஏதுவான இடமுள்ள சூழலில் காவலர் குடியிருப்பு கட்டுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் நியமிக்காததால் வழக்குகள் தேக்கம்
பாவூர்சத்திரம் தொழிலதிபர் சேவியர் டிம்பர் சேவியர்ராஜன் கூறுகையில், ‘பாவூர்சத்திரம் போலீஸ் நிலையம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் இருந்து தரம் குறைக்கப்பட்டு இக்காவல் நிலையம் சுரண்டை காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் பணியில் தொய்வு ஏற்பட்டது. எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் அந்தஸ்து உயர்த்தப்பட்டு இன்ஸ்பெக்டர் பணியில் அமர்த்துவதற்கு ஆணை வெளியிடப்பட்டது.
ஆனால் இதுவரை இன்ஸ்பெக்டர் பணியில் அமர்த்தப்படவில்லை. உடனே இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும். குற்ற வழக்குகளை பாவூர்சத்திரம் காவலர்கள் விசாரிப்பதால் வழக்குகள் தேக்க நிலை ஏற்படுகிறது. உடனே பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் முதல் நிலை தரம் உயர்த்தி குற்ற வழக்குகளை தனியாக விசாரிக்க குற்றப்பிரிவு காவலர்கள் உடனடியாக நியமிக்க வேண்டும்.
காவல் நிலையத்திற்கு செல்லும் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. அதையும் உடனடியாக சீரமைக்க வேண்டும். வெளியூர் இருந்து மாறுதல் ஆகி வரும் காவலர்கள் வாடகைக்கு வீடு கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தப்பட்ட நிர்வாகம் தலையிட்டு பாவூர்சத்திரம் காவலர் குடியிருப்பு கட்டுவதற்கு கூடிய விரைவில் ஆவண செய்ய வேண்டும்’ என்றார்.
பணிச் சுமையால் தவிக்கும் காவலர்கள்
பாவூர்சத்திரம் காவல்நிலையத்தில் 60 மேற்பட்ட காவலர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது பாதி காவலர்கள் தான் பணியில் இருக்கின்றனர். இதனால் காவலர்கள் கூடுதல் பணிச்சுமையால் தவித்து வருகின்றனர்.
பாதுகாப்பு பணி மற்றும் குற்றச்சம்பவங்களை தடுப்பது மற்றும் விசாரணையை துரிதப்படுத்த வேண்டியது போன்ற பல்வேறு பணிகளை காவலர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே காவல்நிலையத்தில் கூடுதல் காவலர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


