வடமதுரை: வடமதுரை அருகே, வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவரை கைது செய்த வனத்துறையினர், அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி, அலுமினிய தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே, வேலாயுதம்பாளையம், ஆலம்பட்டி வனப்பகுதிகளில் மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக மாவட்ட வனத்துறைக்கு புகார் வந்தது.
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின்பேரில், வனச்சரகர்கள் மதிவாணன், முருகேசன் வனவர்கள் முரளி, கார்த்திக், சாமியப்பன், மற்றும் வனத்துறையினர் அடங்கிய தீபாவளி சிறப்பு வேட்டை தடுப்புக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, ஆலம்பட்டி வள்ளிக்கரடு வனப்பகுதியில் ஒருவர் நாட்டுத்துப்பாக்கியால் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரிய வந்தது.
அவரைப் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், அவர் ஆலம்பட்டி அருகே உள்ள எல்லைக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா (43) என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த வனத்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி, அலுமினியக் குண்டுகள், டார்ச் லைட், டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.