கடந்த 15 ஆண்டுகளில் கோவை வனக்கோட்டத்தில் 232 காட்டு யானைகள் உயிரிழப்பு: இந்தாண்டில் 13 யானைகள் உயிரிழப்பு
கோவை: கோவை வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் தற்போது வரையிலான 15 ஆண்டு காலத்தில் 232 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள கோவை வனக்கோட்டம் 694 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி, புலி, சிறுத்தை, மான், காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக கோவை வனகோட்டத்தில் 200க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது.
அதிலும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் கிராமப்பகுதிக்குள் நுழைவதும், அதனால் பயிர் சேதங்கள் ஏற்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. சில சமயங்களில் காட்டு யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதும் நடந்து வருகிறது. இதேபோல இயற்கை மரணம், நாட்டு வெடி, மின்சார தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் காட்டு யானைகள் உயிரிழப்பதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2010 முதல் தற்போது வரையிலான 15 ஆண்டு காலத்தில் 232 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறையினர் சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி 202 யானைகள் நோய் மற்றும் வயது முதிர்வு போன்ற இயற்கையான காரணங்களாலும், 30 யானைகள் இயற்கைக்கு மாறான காரணங்களாலும் உயிரிழந்துள்ளன.
அதிகபட்சமாக கடந்த 2023ம் ஆண்டில் 23 யானைகளும், குறைந்தபட்சமாக கடந்த 2024ம் ஆண்டில் 8 யானைகளும் உயிரிழந்துள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 15 யானைகள் பல்வேறு காரணங்களில் உயிரிழந்துள்ளன. இந்தாண்டில் இதுவரை 13 யானைகள் உயிரிழந்துள்ளன. அவற்றில் 10 யானைகள் இயற்கையான காரணங்களால் உயிரிழந்துள்ளன. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ‘‘கோவை வனக்கோட்டத்தில் உள்ள காட்டு யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல வலசை வரும் யானைகளும் வந்து செல்கின்றன. காட்டு யானைகள் பெரும்பாலும் நோய் மற்றும் வயது முதிர்வு காரணமாக தான் அதிகளவில் உயிரிழந்துள்ளன. நாட்டி வெடி, மின்சாரம் தாக்குதல் போன்ற காரணங்களினால் காட்டு யானைகள் உயிரிழப்பது குறைந்த அளவிலேயே உள்ளது.
காட்டு யானைகளின் இறப்பிற்கான காரணம் கண்டறிய வனகால்நடை மருத்துவர்களால், உடற்கூராய்வு செய்யப்படுகின்றன. இயற்கைக்கு மாறான காரணங்களினால் காட்டு யானைகள் உயிரிழக்க நேரிட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டு வெடி, மின் வேலி தொடர்பாக அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல மலையோரத்தில் உள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது’’ இவ்வாறு அவர்கள் கூறினர்.
காரணம் என்ன?
கோவை வனக்கோட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளில் உயிரிழந்த 232 யானைகளில், 202 யானைகள் நோய் மற்றும் வயது முதிர்வு போன்ற இயற்கையான காரணங்களாலும், 30 யானைகள் இயற்கைக்கு மாறான காரணங்களாலும் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக கடந்த 2023ம் ஆண்டில் 23 யானைகளும், குறைந்தபட்சமாக கடந்த 2024ம் ஆண்டில் 8 யானைகளும் உயிரிழந்துள்ளன.
நடப்பாண்டில் 13 யானைகள் பலி
இந்தாண்டில் கோவை வனக்கோட்டத்தில் இதுவரை 13 யானைகள் உயிரிழந்துள்ளன. அவற்றில் 10 யானைகள் இயற்கையான காரணங்களாலும், 3 யானைகள் இயற்கைக்கு மாறான காரணங்களாலும் உயிரிழந்துள்ளன.


