சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே அரசு பஸ் மற்றும் சரக்கு வாகனங்களை காட்டு யானை வழிமறித்ததால், பயணிகள், ஓட்டுனர்கள் பீதியடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுவதோடு அவ்வப்போது சாலையை கடந்து செல்கின்றன. இந்நிலையில், இன்று அதிகாலை பண்ணாரி அம்மன் கோயில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் வந்த அரசு பேருந்து மற்றும் சரக்கு வாகனங்களை வழிமறித்தது.
இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர். சிறிது நேரம் வாகனங்களை வழிமறித்து காட்டு யானை நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காட்டு யானை மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றபின் வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளை காட்டு யானைகள் வழிமறித்து கரும்புத்துண்டுகளை சுவைத்து பழகியதால், சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.