சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே இன்று அதிகாலை வேனை வழிமறித்த காட்டு யானை அதிலிருந்த தக்காளிப்பழங்களை எடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கேர்மாளம் மலைப்பகுதியில் இருந்து அறுவடை செய்த தக்காளி பழங்களை ஏற்றிக் கொண்டு வேன் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மார்க்கெட் நோக்கி இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் கேர்மாளம்-ஆசனூர் வனப்பகுதி சாலையில் சென்று கொண்டிருந்தது. கானக்கரை கிராமம் அருகே சென்றபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை சாலையின் நடுவே நின்றபடி வேனை வழிமறித்தது.
இதனால் டிரைவர் அச்சமடைந்து வேனை நிறுத்தினார். அப்போது அருகில் வந்த யானை வேனில் பாரம் ஏற்றப்பட்டு இருந்த தக்காளிப்பெட்டிகளை தனது தும்பிக்கையால் எடுக்க முயன்றது. டிரைவர் சிறிது நேரம் போராடி வேனை மெதுவாக நகர்த்தி யானையிடம் இருந்து தப்பினார். சமீபகாலமாக கரும்பு பாரம் ஏற்றிய லாரிகளையும், காய்கறி பாரம் ஏற்றிய வேன்களையும் காட்டு யானைகள் வழிமறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.