*உடல் நலம் பாதிக்கும் அபாயம்
ஊட்டி : ஊட்டி அருகே கேத்தி பாலாடா பகுதியில் நீரோடையில் கொட்டப்படும் சேதமடைந்த கேரட்களை காட்டுமாடுகள் மற்றும் கால்நடைகள் உட்கொண்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கேரட், உருளைகிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற இங்கிலீஸ் காய்கறிகள் எனப்படும் மலை காய்கறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதில் கேரட் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளைய கூடிய கேரட்டிற்கு தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
கேத்தி பாலாடா, கொல்லிமலை சுற்று வட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட கேரட்கள் கேத்தி பாலாடா பகுதியில் கேரட் கழுவும் இயந்திரங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. முதல் ரக கேரட்கள் மட்டும் தரம் பிரித்து வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது.
அழுகியவை மற்றும் அறுவடையின் போது சேதமடைந்த கேரட்கள், தனியாக பிரிக்கப்பட்டு அங்குள்ள நீரோடையில் கொட்டப்படுகின்றன. அப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட கூடிய காட்டுமாடுகள், கேரட் தழைகளை மட்டும் உண்ணாமல் நீரோடையில் கொட்டப்படும் கேரட்களையும் அளவுக்கு அதிகமாக உட்கொள்கின்றன.
காட்டுமாடுகள் அவற்றை தின்று பழகியதால் தினமும், கேரட் கழிவுகளை தேடி காட்டுமாடுகள் அப்பகுதியில் முகாமிடுகின்றன. இதனால் அவற்றிற்கு உடல் நலக்குறைவு ஏற்படும் சூழலும் உருவாகி உள்ளது. இதுதவிர ஆடு, மாடுகளும் உட்கொண்டு வருகின்றன.