*கவலையில் விவசாயிகள்
திருமங்கலம் : திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காசோளத்தினை, காட்டுபன்றிகள் நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான அச்சம்பட்டி, திரளி, போல்நாயக்கன்பட்டி, சாத்தங்குடி, நடுவக்கோட்டை, கிழவனேரி, தங்களாசேரி, அலப்பலச்சேரி, மதிப்பனூர், பன்னிகுண்டு, சௌடார்பட்டி, காங்கேயநத்தம், பொட்டல்பட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மானாவாரியாக விவசாயிகள் மக்காசோளத்தினை பயிரிட்டுள்ளனர்.
கடந்த ஆடி மாதத்தில் விதைப்பு செய்த மக்காசோளம் தற்போது விளைந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு பெரிய பிரச்னையாக இருந்து வருவது இந்தபகுதியில் அதிகளவில் காணப்படும் காட்டுபன்றிகளாகும்.
மக்காசோள காட்டுக்குள் நுழையும் காட்டுபன்றி கூட்டம் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மக்காசோளம் காட்டுபன்றிகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் பகல் வேளைகளில் கிராமபுறங்களில் உள்ள கண்மாய்கரைகளில் மறைந்திருக்கும் அவை, இரவில் கூட்டம் கூட்டமாக வயலில் நுழைந்து மக்காச்சோளத்தை சாப்பிடுவதற்காக அடியோடு சாய்க்கின்றன.
இதனால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து தங்களாசேரியை சேர்ந்த விவசாயி பால்பாண்டி கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் மக்காசோளத்தினை காட்டுபன்றிகள் அதிகளவில் சேதப்படுத்தி விவசாயிக்கு கடும் நஷ்டத்தினை உண்டாக்கி வருகின்றன.
நாங்களும் காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இரவு நேரத்தில் சிங்கம், புலி, யானை உறுமுவது போல் வானொலியை மரத்தில் கட்டிவைத்து சப்தம் ஏற்படுத்தியும், மக்காச்சோளம் வயல்வெளிகளை சுற்றி இரும்பு கம்பிகள், சேலைகள் கட்டிவைத்தும் அவற்றை கட்டுபடுத்த இயலவில்லை.
திருமங்கலம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் காட்டுபன்றிகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற மாநிலங்களில் உள்ளது போல் காட்டுபன்றிகளை சுட்டு பிடிக்க வேண்டும்.
இந்த பணிகளை பயிற்சி பெற்ற வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும். நாங்கள் மக்காசோளம் பயிரிட வயல்வெளிகளை உழவு செய்து, விதைத்து, மருந்து தெளித்து, களை எடுத்து, அறுவடை செய்யவேண்டும். ஏக்கருக்கு ஒரு விவசாயிக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் வரை செலவு ஏற்படும்.
ஆனால் அறுவடை செய்யும் நேரத்தில் காட்டுபன்றிகளால்விவசாயத்தில் கடும் நஷ்டம் உண்டாகி வருகிறது. எனவே அவற்றை கட்டுபடுத்த உரிய நடவடிக்கைகளை வனத்துறை, வேளாண் துறையினர் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் விவசாயிகளின் வாழ்வாதாரம் சீரழியும்’’ என்றார்.
