ஊட்டி : நீலகிாி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிமீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு புலிகள் மட்டுமின்றி யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு, செந்நாய், ஹைனா எனப்படும் கழுதை புலி மற்றும் பல்வேறு வகையான மான்கள் மற்றும் பல்வேறு வகை பறவைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
இது தவிர தேக்கு மற்றும் ஈட்டி மரங்கள் அதிகளவு உள்ளன. இங்குள்ள வன விலங்குகளின் முக்கிய குடிநீர் ஆதாரம் மாயாறு ஆகும். முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 1 மாத காலத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் பசுமை திரும்பின.
இடம்பெயர்ந்த வன விலங்குகளும் திரும்பின. மாயாற்றிலும் நீர் வரத்து அதிகரித்தது. பசுமையாக மான், யானை, மயில், கரடி, சில சமயங்களில் புலி உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரங்களில் உலா வருகின்றன. குறிப்பாக மாயார் சாலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.