‘‘பெண் வாரிசை எப்படியாவது சட்டமன்றத்திற்கு அனுப்பியே தீர வேண்டும் என்பதில் இலைக்கட்சி மாஜி எம்எல்ஏ குறியா இருக்கிறாராமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘கடைகோடி மாவட்டத்தில் தலைநகர் தொகுதியில் எப்படியாவது தனது பெண் வாரிசை எம்எல்ஏ ஆக்கிவிட வேண்டும் என இலைகட்சி மாஜி எம்எல்ஏ கடும் முயற்சியில் உள்ளாராம்.. ஆனால், அவரது மகனோ, தனது மனைவியை நிறுத்தி தனது சகோதரியை வென்றே தீருவேன் என கூறி வந்தார். ஏற்கனவே மேயர் ஆக வேண்டும் என்ற கனவில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் ஆவதற்கு போட்டியிட்ட தனது சகோதரிக்கு எதிராக தனது மனைவியை காவி கட்சி சார்பில் களம் இறக்கி கடும் போட்டியை கொடுத்தார்.. இதற்காக இரு தரப்பிலும் 50 லகரங்களுக்கு மேல் செலவிடப்பட்டதாம்.. இதில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மகள் வெற்றி பெற்றுவிட்டார்.. ஆனால், மேயர் பதவி கனவாகிப் போச்சு.. இதனால் எம்எல்ஏ ஆகிவிட வேண்டும் என்பதற்காக கட்சி ரீதியாகவும், பொது தளத்திலும் கடும் உழைப்பை மகள் மேற்கொண்டு வர்றாராம்.. இந்நிலையில், மகளுக்கு எதிராக மருமகள் போட்டியிட கூடாது என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டாராம்.. மருமகள் தற்போது தனது மாமனார் மற்றும் நாத்தனாரிடம் ராசியாகி விட்டாராம்.. இதனால், உற்சாகமாக மாஜி எம்எல்ஏவும், அவரது மகளும் கட்சி பணிகளை செய்துக்கிட்டு வருகின்றனராம்.. இதெல்லாம் செய்தாலும், சிட்டிங் தொகுதியை இலைகட்சிக்கு காவி கட்சி விட்டு தருமா? அப்படியே விட்டு தந்தாலும் கட்சியில் சீட் கிடைக்குமா? சீட் கிடைத்தாலும் உள்கட்சி உள்குத்தை தாண்டி வரவேண்டுமே என இலைகட்சியினர் பேசுறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சிக்கலில் மாட்டிய நடிகரை வைத்து இலைக்கட்சியும், மலராத கட்சியும் அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தீவிரம் காட்டி வர்றாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நடிகர் கட்சி நடத்திய பிரசார கூட்டத்தில், போலீசார் விதித்த நிபந்தனைகளை பின்பற்றாமல் போனதை உலகமே உத்துபார்த்ததாம்.. அதில் அந்த நடிகரின் செயல்களை நினைத்து எல்லோருமே ரொம்பவே ஷாக்குலத்தான் இருக்காங்களாம்.. 41 பேர் உயிரிழப்பு என்பதை கரூர் மக்களால் இன்னும் ஜீரணிக்கவே முடியலையாம்.. என்றாலும் இந்த உயிரிழப்பு விவகாரத்தை தமிழக அரசு ரொம்பவே அழகாக கையாண்டு, சட்டம் ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் இல்லாதவாறு முதற்கட்ட நடவடிக்கையை எடுத்து அமைதியை நிலைநாட்டியிருக்குதாம்.. நடிகரை எதிராக நினைத்திருந்தால் இன்னுமே கரூரில் அமைதி ஏற்பட்டிருக்காதாம்.. நடிகர் இன்னும் பெரும் சிக்கலில்தான் சிக்கியிருப்பாராம்.. ஆனால் இந்த உயிரிழப்பை வைத்து இலைக்கட்சி தலைவரும், மலராத கட்சியும் அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்காங்களாம்..
அக்கட்சியின் அல்வா நகர தலைவரோ 41 பேரையும் அடித்து கொன்னுட்டாங்கன்னு புதிய புரளியை கிளப்பி விட்டிருக்காராம்.. எப்படியாவது பொய்யை சொல்லி, மக்களை ஏமாற்றிவிட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்காராம்.. அதே நேரத்தில் 41 பேரின் குடும்பத்தினால் நடிகரின் உயிருக்கு ஆபத்து இருக்குதுன்னு மக்கள் மத்தியில் ஒரு பீதியை கிளப்பிக்கிட்டிருக்காராம்.. இதையெல்லாம் விசாரணை குழு உன்னிப்பாக கவனித்துக்கொண்டுதான் இருக்குதாம்... ஆனால் மாஜி தலைவரான போலீஸ்காரரோ, நடிகர் எப்போதும் கரூருக்கு வரலாம் என்று சொல்றாராம்.. இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் யார் பெரியவர் என்ற பிரச்னையை பொதுவெளியில் கிளப்பி விட்டுக்கிட்டிருப்பதாக பொதுமக்கள் சொல்றாங்க.. இதற்கு ஒருபடி மேலே சென்றுள்ள இலைக்கட்சி தலைவர், பிள்ளையார் சுழி போட்டாச்சுன்னு கூவியிருக்காரு.. இலைக்கட்சி கூட்டத்துல நடிகரின் கொடியை தொண்டர் ஒருவர் தூக்கி பிடிச்சியிருக்காரு.. இதில் ஆழ்ந்து விசாரித்தால் கொடியை தூக்கி பிடிச்சவரு இலைக்கட்சி தொண்டராம்.. இப்படியாக இலைக்கட்சி தலைவர் அவரது ஆசையை நிறைவேற்றிக்கிட்டிருக்காராம்..
இதனால ஷாக்காகி போன இலைக்கட்சி தரப்பு, இந்த ஏமாற்று வேலையை உண்மையென நிரூபிக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்காங்களாம்.. உண்மையான நடிகர் கட்சியின் ஏழை நிர்வாகிகளுக்கு துட்டு ஆசையை காட்டி, கொடியை அசைக்க சொல்லியிருக்காங்களாம்.. இனி ஒவ்வொரு கூட்டத்திலும் நடிகரின் கொடி பறக்குமாம்.. இப்படியெல்லாம் ஆட்சியை பிடிக்கனுமுன்னு ஆசைப்படுறீங்களே.. வெற்றி பெற்றால் முதல்வர் பதவியை எங்களது தலைவருக்கு தருவீங்களான்னு நடிகரின் அதிதீவிர விசுவாசிகள் நாக்கை பிடுங்கிறமாதிரி கேட்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பல்கலை மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளான விவகாரத்தில் நிர்வாகம் புதிய சிக்கலில் மாட்டியிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கல்வி நிறுவனங்கள் அதிகமுள்ள யூனியனில் ஒன்றாக புதுச்சேரி விளங்குகிறதாம்.. இங்குள்ள பல்கலை.யில் பல மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உயர்கல்வி படிச்சிட்டு வர்றாங்களாம்..
ஆனால், சமீபகாலமாக பாலியல் தொந்தரவு மாணவிகளுக்கு அதிகமாகி வருவது குறித்து வலைதளத்தில் தகவல் பரவி ஆதார ஆடியோவும் வெளியானதாம்.. இதுபற்றி முறையாக விசாரிக்க வேண்டிய பல்கலை நிர்வாகவோ அதை மறுக்க, மாணவ சமுதாயம் கொந்தளித்ததாம்.. துணைவேந்தர், பதிவாளரை மாணவர்கள் அணி திரண்டு 8 மணிநேரம் சிறை பிடிக்க, கைது நடவடிக்கைக்கு தள்ளப்பட்டார்களாம் காக்கிகள்.. கெடுபிடியாக மாணவிகள் கைது செய்யப்படவே பிரச்னை காக்கிக்கும், மாணவர்களுக்குமாக திரும்பியதாம்.. இதனால் துறையை கவனிக்கும் உயர் அதிகாரிகளோ புலம்பி வருகிறார்களாம்.. பிரச்னை அவர்களுக்கு இடையில்தான், நாங்கள் சமாதானப்படுத்தவே நுழைந்தோம்.. எளிதில் பேசி தீர்க்க வேண்டியதை நிர்வாகம் கோட்டை விட்டதாலே சூழல் மாறிற்று என அந்தர் பல்டி அடிச்சிட்டாங்களாம்.. அத்தோடு பல்கலை உள் விசாரணை குழுவில் கட்டாயம் இடம்பெறுவோம் என மாணவர்கள் புதிய கெடு வைத்துள்ளார்களாம்.. இதனால் நிர்வாகம் புதிய சிக்கலில் மாட்டி இருப்பது குறித்துதான் யூனியன் முழுக்க பரவலாக பேச்சாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா