Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் வரை கறிசோறு போடணும் என்ற உத்தரவால் இலைக்கட்சி நிர்வாகிகள் ஓடுவது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பூத் கமிட்டி கூட்டத்தில் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட சலசலப்பில் இலைக்கட்சியின் முக்கிய நிர்வாகியை கடிந்துகொண்டாராமே சேலத்துக்காரர்..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘தலைநகரில் இலை கட்சி பூத் கமிட்டி குறித்து கூட்டம் நடந்ததாம்.. இதில், டெக்ஸ்டைல் நகரை சேர்ந்த இலை கட்சியின் முக்கிய நிர்வாகியும், மாஜி அமைச்சருமானவர் கலந்துகொண்டாராம்.. மேலும், கொங்கு மண்டலத்தை சேர்ந்த இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டார்களாம்.. அப்போது, குறிப்பிட்ட பகுதியில் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து, சேலத்துக்காரருக்கும், டெக்ஸ்டைல் நகரை சேர்ந்த அந்த முக்கிய நிர்வாகிக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு.. உடனே சேலத்துக்காரர் அவரை கடிந்துகொண்டாராம்.. இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டதாம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த கொங்கு மண்டலத்தை சேர்ந்த இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள், இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்களாம்.. தற்போது, இந்த டாப்பிக் தான் டெக்ஸ்டைல் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புதிய கட்சி நடிகரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வரவேற்பு இல்லாததால் ரெடிமேடு ஆட்களை கார், வேனில் அழைச்சிட்டு போன கதை தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘புதிதாக கட்சி துவங்கியிருக்கும் நடிகரின் பிறந்த நாளை கிராமங்கள்தோறும் பெரியஅளவில் கொண்டாட வேண்டுமென்று அக்கட்சி தலைமை நிர்வாகிகள் தரப்பில் தொண்டர்களுக்கு கூறப்பட்டிருந்ததாம்.. இதன்படி, ஹனி பீ மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான கிராமங்களில் பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்தாங்களாம்.. ஆனால், எங்கும் வரவேற்பு இல்லையாம்.. விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில் ஆங்காங்கே சிறுவர்கள் மட்டும் கூட்டம், கூட்டமாய் வந்து போய் கொண்டிருந்தார்களாம்.. இந்த தகவல் மாவட்ட நிர்வாகிகளுக்கு போய் சேர்ந்திருக்கு.. இதையறிந்த மாவட்ட நிர்வாகிகள் தங்களுடன் கார் மற்றும் வேன்களில் ரெடிமேடாக ஆட்களை அழைத்துச் சென்றிருக்காங்க... எங்கெல்லாம் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்ததோ, அங்கெல்லாம் கூட்டிச் சென்றவர்களை நிற்க வைத்து போட்டோ எடுத்து பேக் அப் ஆகிவிட்டாங்களாம்... சினிமா ஷூட்டிங்கிற்கு துணை நடிகர்களை மொத்தமாக அழைத்துச் செல்வது போல ஆயிருச்சே நிலைமை என அக்கட்சியினரே புலம்ப தொடங்கி விட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘தேர்தல் வரை கறிசோறு போடணும் என உத்தரவு போட்ட இலைக்கட்சி தலைவரின் நிழலானவரால் தலைதெறிக்க ஓடுகிறாங்களாமே நிர்வாகிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவரின் நண்பரான நிழலானவரு எப்போதுமே ஆணையிடுவதில் வல்லவராம்.. அதனை தலைமேற்கொண்டு செய்ய நிர்வாகிகள் எல்லோரும் ஓடுவாங்களாம்.. ஆனால் தற்போது அவரை கண்டாலே தலைதெறிக்க ஓடும் சம்பவங்களும் நடந்துக்கிட்டிருக்காம்.. அதற்கு அவர் போட்ட உத்தரவுதான் காரணமாம்.. சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கிட்டு வருது.. ஒவ்வொரு ஒன்றிய செயலாளரும் குறைந்தது 5 லட்சம் செலவு செய்யணுமுன்னு சொல்லியிருக்காராம்.. குறிப்பாக 17 அணி நிர்வாகிகளுக்கும் கறி சோறு போடணும்.. அந்த கறி செரிமானம் ஆவதற்குள் அவர்களை பல்வேறு வேலைகளை செய்யவச்சிடணுமுன்னு சொல்லியிருக்காராம்.. இது தேர்தல் வரை தொடரணும்.. கூட்டம் கூட்டமாக ஊருக்குள்ளேயே சுத்தி வந்தால்தான் தேர்தலில் ஜெயிக்கமுடியுமுன்னு சொல்லியிருக்காராம்.. மாங்கனி புறநகர் மாவட்டத்துல 8 தொகுதி இருந்தாலும் அவரது கண்ட்ரோலில் 5 தொகுதி வருதாம்.. இதில் இருக்கும் 20 ஒன்றிய செயலாளர்களில் விரல் விட்டு எண்ணும் வகையில் இருப்பவர்கள்தான் இலைக்கட்சி ஆட்சியின்போது நல்லா துட்டு பார்த்தாங்களாம்.. மற்றவர்கள் எல்லாம் நிழலானவரின் பின்னாலே மட்டும்தான் போனாங்களாம்.. அவர்களின் கண்ணில் கூட துட்டை காட்டலையாம்.. ஆனா இப்போது அவர்கள் 5 லட்சத்தை எப்படி செலவு செய்றதுன்னு தடுமாறுறாங்களாம்.. அதனாலதான் நிழலானவரை கண்டால் தலைதெறிக்க ஓடுறாங்களாம்.. என்றாலும் நிழலானவர் அவரை கண்டா வரச்சொல்லுங்கன்னு தேடுறாராம்..

அதே நேரத்துல இவரது உத்தரவை ஏற்றுக்கொண்டு கறி விருந்து கொடுத்த ஒன்றிய செயலாளருக்கு ஒரே பாராட்டா இருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஆன்மிக பூமியில் மூர்த்தி அதிகாரியின் என்ட்ரியால் மாண்புமிகுகள் எல்லாம் அப்செட்டில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரியில் தாமரை வட்டாரத்தில் அரசியல் ஆருடம் ஆரம்பித்து இருக்கிறதாம்.. ஏற்கனவே தலைவர் பதவி மாற்றம் விவகாரம் அப்போ... இப்போ என பரவிய நிலையில் புஸ்வானம் ஆகிவிட்டதாம்.. தற்போது தாமரையில் இரு அணிகளாக மக்கள் பிரதிநிதிகள் உள்ள நிலையில், வரவுள்ள தேர்தலுக்கு தயாராகி விட்டார்களாம்.. இதனால் தாமரைக்குள் அடுத்தகட்ட குழப்பம் துவங்கியிருக்கும் நிலையில், ஐஎப்எஸ் அதிகாரி மூர்த்தி பெயர் கொண்டவாின் என்ட்ரி விரைவில் நடைபெற உள்ளதாம்.. உள்ளூர் அதிகார மையத்தின் ஆதரவு அவருக்கு கிடைத்திருக்க, அதிருப்தி அணியினரும் சிவப்பு கம்பளம் விரித்துள்ளார்களாம்.. உள்ளூர் பிரபலங்களின் ரகசிய சந்திப்புகளும் அரங்கேறி வருகிறதாம்.. ஆனால் அவரது வருகையால் தங்களது செல்வாக்கு பாதிக்கும் என்பதால் உள்ளூர் செல்வாக்குமிக்க மாண்புமிகுகள் அப்செட்டில் இருக்கிறார்களாம்.. இதன் வெளிப்பாடுகள் மூர்த்தியின் அதிகாரப்பூர்வ என்ட்ரிக்கு பிறகே தாமரையில் வெடிக்கலாம்..’’ என்றார் விக்கியானந்தா.