பொதுக்கூட்ட மேடைகளில் தங்கள் பெயரை சேலத்துக்காரர் சொல்லாததால் கொந்தளித்த நிர்வாகிகள் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
‘‘சேலத்துக்காரர் ஆதரவாளர்களை சந்தித்து பேச ரகசிய களத்தில் இறங்கியிருக்கிறாராமே மாஜி அமைச்சர்..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சிய மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் மாஜி அமைச்சர் ‘வைத்தியானவர்’ இருந்து வருகிறார். இலை கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என ஆதரவு குரல் கொடுத்து வரும் கோபிக்காரருக்கு தேனிக்காரர் ஆதரவு தெரிவித்திருக்காரு.. டெல்டா மாவட்ட இலை கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசும்படி தனது நெருங்கிய ஆதரவாளரான மாஜி அமைச்சர் வைத்தியானவருக்கு தேனிக்காரர் ரகசிய உத்தரவு போட்டுள்ளாராம்.. இதை தொடர்ந்து, வைத்தியானவர், நெற்களஞ்சியம் உள்பட டெல்டா மாவட்டத்தில் சேலத்துக்காரர் மீது அதிருப்தில் இருந்து வரும் மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் யார் யார் இருக்காங்க என தனது நெருங்கிய ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்திருக்காராம்.. இதனால், வைத்தியானவர், சேலத்துக்காரர் மீது அதிருப்தில் உள்ள நிர்வாகிகளை திரைமறைவில் சந்தித்து பேச ரகசிய களத்தில் இறங்கியிருப்பதாக அரசல் புரசலாக பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஆக்கிரமிப்பாளர்கள் கவனிப்பதால் டிராபிக் நெரிசலில் சிறியசேலம் சிக்கி தவிக்கிற கதை தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குறிச்சி மாவட்டத்தில் சேலம்- கோவை நெடுஞ்சாலையில் சிறிய சேலம் இருக்கு.. இந்த சின்ன நகரத்தில் தற்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறதாம்.. நகர சாலையில் மட்டும் விபத்தில் இதுவரை எட்டுக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளார்களாம்.. இதனால் சாலையோர ஆக்கிரமிப்புகள் தடாலடியாக அகற்றப்பட்டதாம்.. ஆனால் மீண்டும் சிலர் அதிகாரிகளை கவனித்து சாலையின் இருபுறமும் பெரியளவில் ஆக்கிரமித்து கட்டிடமே கட்டி விட்டார்களாம்.. இதனால் பகலில்கூட அப்பகுதியில் வாகனங்களில் செல்லவே பொதுமக்கள் தயங்குகிறாங்களாம்.. ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்ட பின்னும், பலமான கவனிப்பால் நடவடிக்கைகள் தள்ளித் தள்ளிப் போகிறதாம்.. ஆகையால் சிறிய சேலத்தில் மாவட்ட நிர்வாகமும் நேரடியாக கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை வலுத்து வருகிறதாம்.. இல்லையெனில் பெரியளவில் போராட்டம் வெடிக்கலாமாம்..’’ என்றார் விக்கியானந்தா... ‘‘இரிடியம் மோசடியில் கட்சி பிரபலங்களும் நெட்வொர்க் போல இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை நகரம் தொடங்கி வெயிலூர், குயின்பேட்டை மாவட்டம் வரை சமீபத்தில் பேசப்பட்ட இரிடியம் மோசடி சம்பவத்தில் ரெய்டு நடந்தது பெயருக்குத்தானாம்.. இதுவரை யாரையும் கைது செய்யவில்லையாம்.. எல்லாமே ஒன்றுமில்லை என்று ஆனதாம்.. சம்பந்தப்பட்டவர்களுக்கு வெயிட்டான கவனிப்புதான் அதுக்கு காரணமாம்.. மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள்னு அடிபட்டவர்கள் அனைவருமே எங்களை யாரும் எதுவும் பண்ண முடியாது.. ஒரு நூறுன்னா, இருநூறு அமுக்கி ஒண்ணுமில்லாம செய்திடுவோம்னு பகிரங்கமாவே பொதுவெளியில் சொல்லி வர்றாங்களாம்.. இந்த மோசடி கடந்த ஆண்டுகளில் பரபரப்பாக பேசப்பட்ட ஆருத்ரா, ஐஎப்எஸ் நிதி மோசடி போன்றதுதானாம்.. அதேநேரத்தில் இரிடியம் தனிமம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மாநிலங்களில் அரசியல் செய்யும் அனைத்து கட்சி பிரபலங்களும் நெட்வொர்க் போல இருப்பதால் இதில் எந்த நடவடிக்கையும் புஸ்ஸென்றுதான் ஆகும் என்பதால், ரெய்டுக்கு வந்தவங்களும் பேருக்கு ரெய்டு நடத்திட்டு போயிட்டாங்கன்னு பரபரப்பா பேசப்படுது.. இதுல உயர் அதிகாரிங்க தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை குரல் எழுந்திருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பொதுக்கூட்ட மேடைகளில் நிர்வாகிகளின் பெயரை அடுத்த முறை சொல்லவில்லை என்றால் நல்லா இருக்காது என கொந்தளிச்சிட்டாங்களாமே இலைக்கட்சி நிர்வாகிகள் தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரின் 10 தொகுதிகளிலும் தலா ஓரிடத்தை தேர்வு செய்து சமீபத்தில் இலைக்கட்சித் தலைமையான சேலத்துக்காரர் சுற்றுப்பயணம் செய்து விட்டுப் போனார். அத்தனை தொகுதிகளிலும் நிர்வாகிகள் பெயரை தன் பேச்சுக்கு முன்னதாக கொடுத்த லிஸ்ட்டிலிருந்து வாசித்து விட்டு போன சேலத்துக்காரரிடம், மேலூர், ஒத்தக்கடை, திருப்பரங்குன்றம் கூட்டங்களில் நிர்வாகிகள் லிஸ்ட் தராததால், மாவட்ட செயலாளரை, அவரது தனயனை மட்டுமே சொல்லிவிட்டு சேலத்துக்காரர் பேசிச் சென்றதுதான் இப்போது தூங்கா நகரில் பெரும் பேசு பொருளாகி இருக்கு.. ‘இரவு பகலாக அலைந்து திரிந்து பணம் செலவழித்து, கூட்டத்திற்கு ஆள் சேர்த்து உழைத்திருக்கிற எங்களுக்கு ஒரே அங்கீகாரம் மேடையில் எங்கள் பெயரைச் சொல்வதுதானே? அதைக்கூடச் சொல்லாவிட்டால் எப்படி?’ என்று மாவட்ட தலைமை நிர்வாகிகளிடம், தொகுதிகளின் நிர்வாகிகள் சட்டையைப் பிடித்து இழுக்காத குறையாக சண்டை போட்டாங்களாம்..
அத்தோடு விடாமல், நேற்றைக்கு தூங்கா நகருக்கு வந்த சேலத்துக்காரரிடமும் முறையிடுவதாக பெரும் கூட்டம் சேர்ந்ததாம்.. மாஜி அமைச்சரின் தாயார் அஞ்சலிக்கென வந்திருப்பவரிடம் பிரச்னைகளை கொண்டு போகாதீர்கள் என்று சக ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டதால் அமைதி காத்த நிர்வாகிகள், ‘‘அடுத்தடுத்த முறை கட்டாயம் ‘அவர்களே’ன்னு, சேலத்துக்காரர் பேரைச் சொல்லி பேசணும்... இல்லேன்னா நல்லா இருக்காது.. சொல்லிப்புட்டோம்..’’ என்று தொகுதிகளின் நிர்வாகிகள் ஆத்திரம் கொப்பளிக்க மிரட்டிப் பேசிவிட்டு வந்திருப்பது, கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.