Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தனித்தலைவராக உயர திட்டம் வச்சிருக்கும் மாஜி போலீஸ்காரர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘குறிப்பிட்ட ஓட்டல்ல சாப்பிட்டுவிட்டு முத்திரை வாங்கிட்டு வரலைன்னா அரசு பஸ் நடத்துனருக்கிட்ட டிக்கெட் வசூல் தொகையை வாங்காம கெடுபிடி பண்றாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘கிரிவலம் மாவட்டத்துல இருந்து தினசரி சென்னைக்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கி வர்றாங்க.. இதுல, சென்னையில இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வர்ற அரசு பஸ், திண்டிவனம் பகுதியில இருக்குற தனியார் ஓட்டல்ல நிறுத்திவிட்டு ஓட்டுநரும், நடத்துனரும் சாப்பிடுவாங்க.. அப்புறம் நடத்துனர் வசூல் செய்யும் பணத்தை கட்டும் ரசீதுல சீல் வாங்கி வந்து கிரிவலம் டெப்போவுல வசூலான தொகைய கட்ட வேண்டுமாம்.. அப்படி வசூல் ஆன தொகைய கட்டும்போது, அந்த ரசீதுல, தனியார் ஓட்டலோட சீல் இல்லைன்னா, பணம் வாங்காம காத்திருக்க வைக்குறாங்களாம்.. இப்படி சீல் இல்லாத நடத்துனரும் டெப்போவுல காத்திருக்க வேண்டியிருக்குதாம்.. காரணம், தனியார் ஓட்டல் நிர்வாகத்துக்கும் பணிமனைக்கும் ஏதோ, மறைமுக ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நடத்துனர்கள்கிட்ட, தனியார் ஓட்டலில் கட்டாயம் பயணிகளை இறக்கிவிட்டு நீங்களும் சாப்பிட்டுவிட்டு பணம் செலுத்தும் ரசீதுல சீல் வாங்கி வரறணும்னு கெடுபிடி செய்றாங்களாம்.. இந்த கட்டாய கெடுபிடிகள் விஷயம் பஸ் டெப்போவ விட்டு, வெளியே வந்து புலம்பல் சத்தமாக மாறியிருக்குது.. இதனால சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விசாரிச்சு உரிய நடவடிக்கை எடுக்கணும்னு குரல் ஒலிக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘வசூலில் கொடிகட்டி பறக்கும் பொறியாளர் அதிகாரிகளுக்கே ஷாக் கொடுக்கிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘முத்து மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சியில் பொறியாளர் ஒருவரின் கை தான் ஓங்கி நிற்கிறதாம்.. வெள்ளி விழா ஆண்டுகளையும் தாண்டி இதே மாநகராட்சியில் கோலோச்சி வரும் இவர் கடந்த இலைக்கட்சி ஆட்சியின் போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போடாத சாலைகளுக்கும் பணம் வசூலித்து தொகையை செட்டில் செய்து விட்டாராம்.. இதை ஒரு சில அதிகாரிகள் கண்டுபிடித்தாலும் அவர்களுக்கே ஷாக் கொடுத்து விடுகிறாராம் அந்தப் பொறியாளர். சமீபத்தில் 2 மாதமே கமிஷனராக இருந்த புதிய அதிகாரி ஒருவர் இந்த விஷயங்களை எல்லாம் அலசி கண்டுபிடித்து, அந்தத் தொகையை மீண்டும் வசூலிக்க திட்டம் போட்டிருந்தாராம்.. ஆனால் அவருக்கு தவறான ஆலோசனை தந்து ஒரு டெண்டரையே கேன்சல் செய்ய வைத்து விட்டாராம் அந்த பொறியாளர்.. அதனால் அந்த விஷயம் ஐகோர்ட்டுக்கு போக கமிஷனரும் மாறிச் சென்று விட்டாராம்.. இதனால் அந்தப் பொறியாளரின் காட்டில் மழை பொழிகிறதாம்.. புதிய அதிகாரிகளாக இருந்தாலும் அவர்களை கையில் போட்டுக் கொண்டு காரியம் சாதிப்பது, ஒத்து வராத அதிகாரிகளை கூண்டோடு மாற்றுவது என பொறியாளர் கொடிகட்டி பறக்கிறாராம்.. முருகா! நீ தான் வேலை எடுக்கணும் என வேண்டுறாங்களாம் சக அதிகாரிகள்..’’ என்றார் விக்கியானந்தா.

‘தனித்தலைவராக உருவெடுக்க மலராத கட்சி தலைவர் முடிவு எடுத்துள்ளாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மலராத கட்சியின் தலைவராக இருந்த மாஜி போலீஸ்காரர், தனித்தலைவராக உருவெடுக்க முடிவெடுத்துள்ளாராம்.. அவர் தலைவராக இருந்தவரை டெல்லி தலைமை ரொம்பவே நம்பியதாம்.. ஆனால் இவர் நல்லவரா, கெட்டவரா என்பதை கண்டுபிடிக்க ஒரு பாராளுமன்ற தேர்தல் தேவைப்பட்டதாம்.. அதுவும் ஒன்றிய நிதி மந்திரி, ஆய்வறிக்கையை தாக்கல் செய்த பிறகு ஒரு முடிவுக்கு வந்ததாம்.. ஆனால் தமிழ்நாட்டில் மலராத கட்சி என ஒரு கட்சி பெயரளவுக்கு தான் இருந்தது.. அதனை ஊரறிய வைத்தது நான்தான் என மாஜி போலீஸ்காரர் இன்னும் மார்தட்டி வருகிறாராம்.. ரொம்பவே தில்லாக இருந்த அவரை இலைக்கட்சி தலைவர், பதவியில் இருந்து தூக்கி எறிந்திட்டாராம்.. ஏற்கனவே அவரை கிணற்றுத் தவளை என கூறி சவால் விடுத்த நிலையில், நானும் ஒரு தலைவன் ஆவேன் என சபதம் எடுத்து செயல்படுத்திக்கிட்டு வறாராம்.. மலராத கட்சியில் இருந்தால் அது நடக்கவே நடக்காது.. தனியாக ஒரு கடையை திறந்தால் மட்டும் அது நடக்கும் என்ற முடிவுக்கு வந்த மாஜி போலீஸ்காரர், செலவுக்கான தொகை போதுமான அளவு சிறுக சிறுக சேர்த்து வச்சிருக்காராம்... முதற்கட்டமாக இலைக்கட்சி தலைவரின் சொந்த ஊரில் ரசிகர் நற்பணி மன்றத்தை தொடங்கி, இதன் மூலம் இலைக்கட்சி தலைவருக்கு செக் வச்சிருக்காராம்.. ரெண்டாவதாக அவரது கட்சியின் தலைவர் சொந்த ஊரான அல்வா நகரிலும் தொடங்கியாச்சி.. இவ்வாறு ஆங்காங்கே ரசிகர் மன்றங்களை அமைத்து, தான் தலைவராக இருந்து மலராத கட்சியில் சேர்ந்தவர்களை வைத்து கட்சி தொடங்கப்போறதா திட்டம் வச்சிருக்காராம்.. இதன் மூலம் தன்னை தலைவர் பதவியில் இருந்து தூக்கிய இலைக்கட்சி தலைவருக்கும், மலராத கட்சிக்கும் சரியான பாடத்தை புகட்டப்போறதாக அவரது ஆதரவாளர்கள் சொல்லிக்கிட்டிருக்காங்க.. தானாகவே வெளியே சென்றால் சிறுக சிறுக சம்பாதித்து வைத்திருக்கும் காசை வச்சி உள்ளே தள்ளிடுவாங்க.. அவர்களாகவே கட்சியில் இருந்து தூக்கி எறிந்தால் அன்று முதல் நானும் ஒரு தலைவனாக உயரமுடியும் என்ற பிடிவாதத்தில் இருக்காராம் மாஜி போலீஸ்காரர்..

ஆனால் யாரை எவ்வாறு கவனிக்க வேண்டும் என்பது ஒன்றிய உள்துறை மந்திரிக்கு தெரியுமாம்.. என்றாலும் தற்போது கை வைத்தால் கூட்டணியில் சலசலப்பு ஏற்படும் என்பதால் பொறுமையாக காத்துக்கிட்டிருக்காராம்.. இதற்காக தேர்தல் பொறுப்பாளரை வைத்து எச்சரிக்கை மணி மட்டுமே அடிச்சிக்கிட்டிருக்காங்களாம்.. இதையெல்லாம் மாஜி போலீஸ்காரர் கேட்பதாக இல்லையாம்.. என்றாலும் குக்கர்காரர், கோபிக்காரர் ஆகியோருடன் கை கோர்த்துள்ள போலீஸ்காரர், இலைக்கட்சி தலைவருக்கு ஒரு சரியான படம் புகட்டுவோமுன்னு ரகசிய சபதம் செஞ்சிருப்பதாக குக்கர்கட்சிக்காரங்க சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.