அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர் கீரைப்பட்டியைச் சேர்ந்தவர் ரசூல் (43). டிரைவர். அமமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர். இவரது மனைவி சிக்களூர் கிராமத்தைச் சேர்ந்த அம்முபீ (35). கடந்த 5ம் தேதி இரவு வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு படுத்த ரசூல், நள்ளிரவில் இரண்டு முறை வாந்தி எடுத்துள்ளார். இதனால் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, ரத்த மாதிரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரசூல் சாப்பிட்ட உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் அதே ஊரைச் சேர்ந்த லோகேஸ்வரன் (26) என்பவருடன் அம்முபீ கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில், தான் சாப்பிட்ட உணவில் விஷம் வைத்திருக்கலாம் என ரசூல் சந்தேகித்தார்.
இதையடுத்து, அம்முபீயின் செல்போனை சோதனையிட்டதில், லோகேஸ்வரனுடன் பேசிய ஆடியோ இருந்தது. அதில் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பாட்டுடன் கலந்து கணவருக்கு கொடுத்ததாகவும், அதில் ஒன்றும் ஆகாததால், மாதுளை ஜூசில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்ததாகவும் பேசியது பதிவாகி இருந்தது. இதுகுறித்து, ரசூல் அரூர் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அம்முபீ மற்றும் லோகேஸ்வரனை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். விசாரணையில், லோகேஸ்வரனுடன் 6 ஆண்டுகளாக அம்முபீ தொடர்பில் இருந்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ரசூல், சலூன் கடைக்குள் புகுந்து லோகேஸ்வரனை சரமாரி தாக்கியுள்ளார். இதையடுத்து தங்களின் உல்லாசத்திற்கு இடையூறாக இருக்கும் ரசூலை கொலை செய்யும் நோக்கத்தில் திட்டமிட்டு உணவு, ஜூசில் ஸ்லோ பாய்ஷனை கொடுத்தது தெரியவந்தது. இந்நிலையில், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரசூல் நேற்று இறந்தார். இதையடுத்து, அம்முபீ, லோகேஸ்வரன் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.