8 வயது மகன் கண்முன்னே மனைவியை தீவைத்து எரித்து கொன்ற கணவர்: ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தது அம்பலம்
நொய்டா: கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடூரமாக தாக்கி, அவரது 8 வயது குழந்தையின் முன்பாக தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் சிர்சா கிராமத்தைச் சேர்ந்த விபின் பாட்டியை, நிக்கி என்ற பெண் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். நிக்கியின் மூத்த சகோதரி காஞ்சனும் அதே குடும்பத்தில்தான் திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணமான சில காலங்களிலேயே, இரு சகோதரிகளையும் புகுந்த வீட்டார் ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்யத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து இரு சகோதரிகளையும் தாக்கினார்கள்.
இந்நிலையில் கடந்த வியாழன் கிழமை இரவு, இந்த கொடூரம் உச்சக்கட்டத்தை எட்டியது. நிக்கியை அவரது கணவர் விபின் மற்றும் மாமியார் தயா ஆகியோர் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த பயங்கரம் அவரது 8 வயது சின்னஞ்சிறு மகனின் கண்முன்னே அரங்கேறியுள்ளது. பின்னர், அவர் மீது திரவம் போன்ற ஒன்றை ஊற்றி லைட்டரால் தீ வைத்துள்ளனர். உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில், தப்பிப்பதற்காக மாடிப்படியில் இருந்து அவர் இறங்கி ஓடினார்.
பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிக்கி, மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சகோதரி காஞ்சன் அளித்த புகாரின் பேரில், கஸ்னா காவல் நிலையத்தில் நிக்கியின் கணவர் விபின், மைத்துனர் ரோஹித் பாட்டி, மாமியார் தயா மற்றும் மாமனார் சத்வீர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவர் விபின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றவர்களைக் காவல்துறை தேடி வருகிறது. இதற்கிடையே, ‘நிக்கிக்கு நீதி வேண்டும்’ என்ற பதாகைகளுடன் பொதுமக்கள் கஸ்னா காவல் நிலையத்தின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நிக்கியின் மகன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘முதலில் என் தாய் மீது எதையோ ஊற்றினார்கள். பிறகு அவரை அறைந்து, லைட்டரைப் பயன்படுத்தி தீ வைத்தனர்’ என்று சாட்சியம் அளித்துள்ளார். இதுகுறித்து கிரேட்டர் நொய்டா காவல்துறை துணை ஆணையர் சுதிர் குமார் கூறுகையில், ‘உயிரிழந்த நிக்கியின் சகோதரி காஞ்சன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, அவரது கணவர் விபினை கைது செய்துள்ளோம். வீட்டில் இருக்கும் சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்த போது, நிக்கியின் தலைமுடியை அவரது கணவர் பிடித்து இழுத்துச் செல்வதும், அவரைத் தாக்குவதுமான கொடூரமான காட்சிகள் பதிவாகியுள்ளன. வரதட்சணை கொடுமையின் காரணமாக நிக்கியை தீவைத்து கொன்றுள்ளனர். நிக்கியின் சகோதரி காஞ்சனாவுக்கும், அதேபோல் வரதட்சணை கொடுமை நடந்துள்ளது.
அவரிடம் வரதட்சணையாக பல லட்சம் ரூபாயை அவரது கணவர் கறந்துள்ளார். அதேபோல் நிக்கியையும் வரதட்சணை கேட்டு அவரது கணவர் பல்வேறு கொடுமைகளை செய்துள்ளார். தொடர் கொடுமையின் உச்சக்கட்டமாக நிக்கியை அடித்து துன்புறுத்தி தீவைத்துக் கொன்றுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் காஞ்சனாவும், நிக்கியின் சிறுவயது மகனும் இருந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.