செஞ்சி: செஞ்சி அருகே குடும்ப தகராறில் மனைவியை ஓடைநீரில் அமுக்கி கொலை செய்துவிட்டு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பெருங்காப்பூர், பசுமலைத்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் நமச்சிவாயம் (60). விவசாயி. இவரது மனைவி பத்மாவதி (55). தம்பதிக்கு பாண்டுரங்கன் (33), பாண்டியராஜன் (31) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் பாண்டியராஜனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. பத்மாவதி செஞ்சி சக்கராபுரம் பகுதியில் உள்ள அரசு உருது பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். இதனால் நாள்தோறும் அப்பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் கணவருடன் சேர்ந்து கால்நடைகளை பராமரிப்பது மற்றும் விவசாய பணிகளை கவனித்து கொள்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் நமச்சிவாயம் மற்றும் அவரது மனைவி பத்மாவதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்படுமாம். நேற்று முன்தினம் வழக்கம்போல் பத்மாவதி சத்துணவு பொறுப்பாளர் பணிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பி உள்ளார். பின்னர் வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கால்நடைகளை கொட்டகையில் கட்டுவதற்கு சென்றுள்ளார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் பத்மாவதி வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது பசுமலைத்தாங்கல் மலை அடிவாரத்தின் கீழே உள்ள ஓடை நீரில் பத்மாவதி மூச்சு பேச்சின்றி மயக்க நிலையில் கிடந்தார். மேலும் அதன் அருகில் இருந்த மரத்தில் நமச்சிவாயம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட கிராம மக்கள், பத்மாவதியை மீட்டு உடனே செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பத்மாவதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார், இருவரின் உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் மனைவியை அங்குள்ள ஓடை நீரில் அமுக்கி நமச்சிவாயம் கொலை செய்து விட்டு தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து நமச்சிவாயத்தின் மகன் பாண்டுரங்கனிடம் புகாரை பெற்ற போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.