Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனைவி மனு: காவல்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5ம் தேதி அவரது வீட்டின் முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வழக்கில் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை. முக்கியமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலையில் உள்ள அரசியல் தொடர்பு குறித்து விசாரிக்கப்படவில்லை.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுடன் நெருக்கமான செல்வப்பெருந்தகையிடம் விசாரணை நடத்தவில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கப்படவில்லை. உண்மையை வெளிக்கொண்டு வராமல் அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ரவுடிகள் என்பதால் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணை வந்தபோது, இதே கோரிக்கையுடன் ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தொடர்ந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், இந்த மனுவை ஏற்க கூடாது என்று அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதி, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.