Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனைவி, மகளை மிரட்டி மோசடியாக பதிவு செய்து உள்ளனர் அதிமுக மாஜி அமைச்சரிடம் இருந்து ரூ.100 கோடி சொத்தை மீட்டு தாருங்கள்: கரூர் காவல் நிலையத்தில் தொழிலதிபர் புகார்

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடமிருந்து ரூ.100 கோடி சொத்தை மீட்டு தரும்படி அவர் மீது தொழிலதிபர் நில மோசடி புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மேலக்கரூர் சார் பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த 9ம்தேதி அளித்த ஒரு புகாரில், கரூரை சேர்ந்த 7 பேர் போலியான சான்றிதழ் கொடுத்து தன்னை ஏமாற்றி பத்திரப்பதிவு செய்ததாக ஒரு புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 12ம்தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று (15ம்தேதிக்கு) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், கரூர் நகர காவல் நிலையத்தில், நேற்று புகார் அளித்தார். அதில், ‘நான் அதிமுகவை சேர்ந்தவன். நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறேன். அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், எனக்கும் இடையே பல ஆண்டுகளாக பணம் கொடுக்கல், வாங்கல், வரவு செலவு இருந்தது. அவர் அமைச்சராக இருந்த போது, அவரது பினாமிகள் பெயரில் எடுக்கப்பட்ட ஒப்பந்த பணிகளுக்கு மின் சாதன பொருட்கள் அனுப்பினேன். அவர் நடத்தி வந்த நிறுவனங்கள் மற்றும் அவர் தம்பிக்கு ரூ.10 கோடி வரை வட்டிக்கு கடன் கொடுத்திருந்தேன். இதற்கான மாத வட்டி ரூ.15 லட்சம்.

கடந்தாண்டு ஜூன் முதல் வட்டி வழங்கப்படாத காரணத்தினால், கடந்த ஜனவரி மாதம் விஜயபாஸ்கரை நேரில் சந்தித்து, வட்டியுடன் பணம் தர வேண்டும் எனக்கேட்ட போது, பணம் தர முடியாது எனக்கூறி திட்டி அனுப்பி விட்டார். இதற்கு அடுத்து ஒரு வாரம் கழித்து, அவரது வீட்டுக்கு என்னை அழைத்து, எனக்கு தறி போடுவதற்கு தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் உள்ள எனது ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அவர் சொல்லும் நான்கு பேர்களுக்கு எழுதி தரும்படி கேட்டு மிரட்டினார். தொடர்ந்து, சொத்துக்களை எனது சகலை மகன் பிரவின் பெயரிலாவது மாற்றித்தர கோரினார். நான் மறுத்தததால், அவரது அடியாட்கள் என்னை தாக்கினர்.

தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 8ம்தேதி எனது மகள் ஷோபனா பெயருக்கு எனது சொத்துக்களை தான செட்டில்மெண்ட் எழுதி வைத்தேன். 27ம் தேதி, விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் உட்பட 10க்கும் மேற்பட்டோர் பத்திரத்தை கேட்டு அடித்து துன்புறுத்தினர். மீண்டும் ஏப்ரல் 4ம்தேதி பிரவீன் அடியாட்களுடன் வந்து, அசல் ஆவணங்களையும் கேட்டும், விஜயபாஸ்கர் மற்றும் சிலர், ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் போட்ட வழக்கை முழுமையாக என்னை ஏற்று கொள்ள சொல்லி வற்புறுத்தி தாக்கினர். இதற்காக, கோவை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று திரும்பினேன். இதனை பயன்படுத்தி விஜயபாஸ்கர் மற்றும் ஆதரவாளர்கள் எனது மகள் ஷோபனா மற்றும் மனைவி ஆகியோரை மிரட்டி, போலி ஆவணங்களை வழங்கி மோசடியாக சொத்துக்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து சார்பதிவாளர் அலுவலகத்தில பத்திரப்பதிவுவை ரத்து செய்ய மனு அளித்தேன். இதனால், சிலர் என்னை கடத்தி சென்று அடித்து, காசோலைகள், வெற்று ஆவணங்களில் கைரேகையை பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அச்சத்தின் காரணமாக இதுவரை புகார் அளிக்காத நிலையில், உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னையும், எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளித்து, மோசடியாக அபரிக்கப்பட்ட ரூ.100 கோடி சொத்தை மீட்டு தர வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.