தர்மபுரி: தர்மபுரி அருகே 8 ஆண்டுக்கு முன்பு, கை, கால்களை கட்டி உயிருடன் புதைத்து பைனான்ஸ் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தர்மபுரி நகரில் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரூபன் கவியரசு (42). இவர் தர்மபுரியில் பைனான்ஸ் நடத்தி வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக, இவரது முதல் மனைவி பிரிந்த நிலையில், 2வதாக நிர்மலா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இன்ஜினியரிங் பட்டதாரியான நிர்மலா, கல்லூரியில் படிக்கும்போது, தனியார் கல்லூரி பேராசிரியர் அபினேஷ் (30) என்பவரை காதலித்துள்ளார். ரூபன் கவியரசை திருமணம் செய்து கொண்ட பிறகும், அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இதையறிந்த ரூபன் கவியரசு, மனைவியை கண்டித்துள்ளார்.
இதையடுத்து, நிர்மலா கள்ளக்காதலனுடன் சேர்ந்து ரூபன் கவியரசை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, கடந்த 2017 நவம்பர் 14ம் தேதி, பைனான்ஸ் அலுவலகத்தில் இருந்த ரூபன் கவியரசை கடத்திச்சென்ற கும்பல், அவரை அடித்து, உதைத்து கை-கால்கள் கட்டிய நிலையில் உயிருடன் குண்டல்பட்டி தனியார் கல்லூரி அருகே காலி நிலத்தில் குழி தோண்டி உயிருடன் புதைத்தனர். இந்நிலையில், 2017 நவம்பர் 15ம் தேதி, ரூபன் கவியரசுவை காணவில்லை என, அவரது பெற்றோர் தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டார். நிர்மலாவிடம் விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், ேபாலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், கூலிப்படையை வைத்து தனது கணவனை உயிருடன் புதைத்து, கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார், ரூபன் கவியரசுவின் சடலத்தை தோண்டி எடுத்தனர். பின்னர், மருத்துவர்கள் நடத்திய பிரேத பரிசோதனையில், அடித்து துன்புறுத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக நிர்மலா, அவரது கள்ளக்காதலன் அபினேஷ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோனிகா, நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை மூலம் கொலை செய்த நிர்மலா, கள்ளக்காதலன் அபினேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டனர்.