Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

வேறு ஒருவருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசியதால் சந்தேகம்: காதல் மனைவி கழுத்து அறுத்து படுகொலை: கொடூர கணவன் கைது

மதுராந்தகம்: வேறு ஒருவருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசியதால் சந்தேகத்தில் காதல் மனைவியை கழுத்து அறுத்து படுகொலை செய்த கொடூர கணவன் கைது செய்யப்பட்டார். மதுராந்தகத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிலாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சரண் (24). கூலி தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மதுமிதா (19). இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்தனர். இவர்களது காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரியவந்தது. கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி இருவரும் காதலித்து வந்தனர்.இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சரணும், மதுமிதாவும் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு பிறகு, மதுராந்தகம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக மண வாழ்க்கையை தொடங்கினர்.

இந்நிலையில், நேற்று ஒரு நபருடன் மதுமிதா, செல்போனில் பேசி கொண்டிருந்தாராம். இதனால் சந்தேகமடைந்த சரண், ‘யாருடன் இவ்வளவு நேரம் பேசுகிறாய்’ என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘தெரிந்தவர்தான்’ என்று கூறியுள்ளார். அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதிகமாக ேகாபத்தை வெளிக்காட்டாமல் அமைதி காத்தார். ஆனாலும் மனதில் சந்தேகம் அதிகரித்ததால் அவரை தீர்த்துக்கட்ட சரண் முடிவு செய்தார்.

இந்நிலையில், நேற்று மாலையில் மதுமிதாவை சமாதானப்படுத்துவது போன்று நடித்து நைசாக அனந்தமங்கலம் கிராம கோயிலுக்கு சென்று வரலாம் என கூறி அழைத்து சென்றார் சரண். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு அங்குள்ள மலை பகுதியை பார்த்து விட்டு வரலாம் என அழைத்து சென்றார். அங்கு சென்றதும் இருவரும் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், ஏற்கனவே திட்டமிட்டபடி அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியை நைசாக எடுத்து மதுமிதாவின் கழுத்தை சரமாரியாக அறுத்தார்.

இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் மதுமிதா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து சரண், தப்பி சென்று விட்டார். சிறிது நேரத்தில் அவ்வழியாக சென்ற கிராம மக்கள், மதுமிதா கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே ஒரத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், சரண்தான் மதுமிதாவை கொலை செய்தார் என தெரியவந்ததால் அவரை தேடினர். அப்பகுதியில் சுற்றி திரிந்த அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.