கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் 4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து கணவன் தற்கொலை: உத்தரபிரதேசத்தில் சோகம்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் 4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த சல்மான் என்பவரின் மனைவி குஷி என்பவருக்கும் வேறொரு நபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. கடந்த 5 மாதங்களில் 5 முறை தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சல்மான், தனது 4 குழந்தைகளுடன் கைரானா பகுதியில் உள்ள யமுனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, அவர் ஒரு காணொளியைப் பதிவு செய்து தனது சகோதரிக்கு அனுப்பியுள்ளார். அதில், ‘எனது சாவுக்கு என் மனைவி, அவரது காதலன் மற்றும் மனைவியின் குடும்பத்தினரே காரணம்’ என்று அவர் உருக்கமாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, யமுனை ஆற்றில் குதித்து பலியான தந்தை, 4 குழந்தைகளை தேடும் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
நேற்று சல்மான் மற்றும் அவரது 12 வயது மகளின் உடல்கள் யமுனை ஆற்றிலிருந்து மீட்கப்பட்டன. மற்ற குழந்தைகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சல்மானின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான குஷியையும், அவரது கள்ளக்காதலனையும் தேடி வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.