Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனைவி, குழந்தை பிரிந்த ஏக்கத்தால் பயங்கரம் அண்ணி, 2 மகள்கள் கழுத்தறுத்து படுகொலை

*சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை

திருமலை : மனைவி, குழந்தையை பிரிந்த ஏக்கத்தால் தனது அண்ணி மற்றும் அவரது 2 மகள்களை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் தானும் தற்கொலை செய்துகொண்டார்.ஆந்திர மாநிலம் திருப்பதி பத்மாவதி நகரை சேர்ந்தவர் தாஸ் (40), வியாபாரி. இவரது மனைவி சுனிதா (35). மகள்கள் தேவிஸ்ரீ (13), நீரஜா (11). இவர்கள் இருவரும் அங்குள்ள பள்ளியில் 8 மற்றும் 6ம் வகுப்பு படித்து வந்தனர். தாஸின் தம்பி மோகன் (36), சாப்ட்வேர் இன்ஜினியர். கடந்த 2019ம் ஆண்டு மோகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என மோகன் கூறி வந்தாராம். ஆனால் அவரை கட்டாயப்படுத்தி அண்ணன், அண்ணி ஆகிய இருவரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்தார்களாம்.

மோகன் தனது மனைவியுடன் அதேபகுதியில் தனியாக குடும்பம் நடத்தி வந்தார். அவருக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தம்பதி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தனது குழந்தையுடன் மோகனை பிரிந்து அவரது மனைவி தனியாக சென்றுவிட்டார். தனக்கு விருப்பம் இல்லாதபோது கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த நிலையில் தற்போது குழந்தையுடன் மனைவி பிரிந்து விட்டாரே? எனக்கூறி தனது அண்ணன் மற்றும் அண்ணியிடம் மோகன் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

மேலும் அடிக்கடி அண்ணனிடம் சென்று `எனது வாழ்க்கையை சீரழித்துவிட்டு நீ மட்டும் குடும்பத்தோடு சந்ேதாஷமாக இருக்கிறாயா?’ என தகராறு செய்வாராம். நேற்றுமுன்தினம் மாலை தாஸ் கடைக்கு சென்ற நிலையில், வீட்டில் சுனிதா மற்றும் 2 மகள்கள் மட்டும் இருந்தனர். அப்போது அங்கு வந்த மோகன், அண்ணியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மோகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுனிதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

சத்தம் கேட்டு பக்கத்து அறையில் படித்துக்கொண்டிருந்த மகள்கள் ஓடிவந்தனர். தனது தாய் இறந்து கிடப்பதை பார்த்து அலறியபடி கூச்சலிட்டனர். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் மோகன் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தேவிஸ்ரீ, நீரஜாவையும் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்தார். பின்னர் அங்குள்ள அறையில் மோகன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தாசுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அவர் கதறிஅழுதபடி வீட்டுக்கு வந்தார். இதுகுறித்து திருப்பதி வெங்கேடஸ்வரா பல்கலைக்கழக போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.