வட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை: ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
சென்னை: தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளின் பரவலாக கனமழை பெய்தது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வட தமிழ்நாட்டின் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னை மாநகரின் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்தது காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், கல்பாக்கம், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் உட்பட பல்வேறு பகுதியில் கனமழை பெய்தது.
வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளின் பிற்பகலுக்கு பிறகு பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூரில் சலவை தொழிலாளி செல்வா கணேஷ் என்பவரின் வீடு கன மழையால் இடிந்து விழுந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் உளவு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில், நேற்று கிருஷ்ணகிரி, பர்கூர், ஜெகதேவி, குந்தாரப்பள்ளி, காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. நீலகிரி கூடலூர் சுற்றுவட்டாரத்தில் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.