*கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரந்து பரவலான மழை பெய்து வருகிறது. மேலும், சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், நேற்று முன்தினம் தொடங்கி, தொடர்ந்து பரவலான மழை பெய்து வருகிறது. அதன்படி, கலசபாக்கத்தில் அதிகபட்சமாக 27 மிமீ மழை பதிவானது.
மேலும், செங்கத்தில் 4.6 மிமீ, ஜமுனாமரத்தூரில் 6 மிமீ, திருவண்ணாமலையில் 3.2 மிமீ, தண்டராம்பட்டில் 9.4 மிமீ, கீழ்பென்னாத்தூரில் 18.6 மிமீ, ஆரணியில் 6 மிமீ, போளூரில் 1.6 மி.மீ செய்யாறு 5 மி.மீ, வந்தவாசி 10மிமீ, வெம்பாக்கத்தில் 15 மிமீ, சேத்துப்பட்டு 14 மிமீ மழை பதிவானது.
நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு பரவலான மழை பெய்தது, மாலை முதல் மழை தீவிரமடைந்தது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியைடைந்துள்ளனர். இந்நிலையில், சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2300 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது, அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 119 அடியில், தற்போது 118 அடி நிரம்பியுள்ளது. அணையின் நீர் கொள்ளளவு மொத்தமுள்ள 7321 மில்லியன் கன அடியில் தற்போது 7108 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
அணை முழுமையாக நிரம்ப இன்னும் ஒரு அடி மட்டுமே உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியிருப்பதால், அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 2300 ஆயிரம் கன அடி உபரி நீர் தென்பெண்ணையாற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.
அதனால், தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை தொடரும் வாய்ப்பு இருப்பதால், தென்பெண்ணையில் மேலும் வெள்ளப்பபெருக்கு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், செண்பகத் தோப்பு அணை, குப்பநத்தம் அணை, மிருகண்டா அணை ஆகியவையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே, அணைகளில் இருந்து பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால், செய்யாற்றிலும் கமண்டலநாக நதியிலும் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.