கிறைஸ்ட்சர்ச்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி, 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் டெவான் கான்வே அற்புதமாக ஆடி 49 ரன் குவித்தார்.
மற்றொரு துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 4 ரன்னிலும் பின் வந்த வில் யங் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டேரில் மிட்செல் 118 பந்துகளில் 2 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 119 ரன் வெளுத்தார். 50 ஓவரில் நியூசிலாந்து, 7 விக்கெட் இழந்து 269 ரன் எடுத்தது. அதையடுத்து, 270 ரன் வெற்றி இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. துவக்க வீரர்கள் ஜான் கேம்ப்பெல் 4, அலிக் அதனேஸ் 29 ரன்னில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
கேப்டன் ஷாய் ஹோப் 37, ஷெர்ஃபேன் ரூதர்போர்ட் 55, ரோஸ்டன் சேஸ் 16 ரன்னில் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரன் எடுக்க போராடியபோதும், 50 ஓவரில் அந்த அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 262 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஜஸ்டின் கிரீவ்ஸ் 38, ரொமாரியோ ஷெபர்ட் 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அதனால் 7 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து முதல் வெற்றியை ருசித்தது. ஆட்ட நாயகனாக, 119 ரன் விளாசிய டேரில் மிட்செல் அறிவிக்கப்பட்டார்.


