மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதியை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ளிட்ட ஒப்பேறாத காரணங்களை கூறி மெட்ரோ ரயிலுக்கான திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது ஒன்றிய அரசு. அப்படியென்றால் 2011ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சிறந்த இரண்டாம் நிலை நகரங்களில் ஒன்றாக கோவையை தேர்ந்தெடுத்தது ஏன் என பல கேள்விகள் எழுகின்றன. ஏற்கனவே, 2015ம் ஆண்டு அப்போதைய பாஜ அரசின் ஒன்றிய நிதியமைச்சர் அருண் ஜெட்லியால், பட்ஜெட் தாக்கலின்போது தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
அப்போது அறிவிக்கப்பட்ட பெரும்பாலான நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கே வந்து விட்டது. 2019ம் ஆண்டு, ஜனவரி 27ம் தேதி, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இப்போது வரை அவர்தான் பிரதமராக உள்ளார். ஆனால், எய்ம்ஸ் கட்டுமானத்தின் முதல்கட்டப்பணிகளே 2026 ஜனவரியில் தான் முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பார்க்காமலே, அங்கிருந்து ஒரு பேட்ச் மாணவர்கள் வெளியேறும் சூழல்தான் தற்போது உள்ளது.
இதேபோல தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு மாநில அரசு கேட்ட நிவாரண நிதியை தராமல் இழுத்தடித்தது, யானைப்பசிக்கு சோளப்பொரி போல ஒரு சதவீதத்துக்கும் குறைவான நிவாரண நிதியை வேண்டாவெறுப்பாய் வழங்கியது என, தமிழக மக்களின் நலனில் துளி கூட அக்கறையில்லாத ஒரு நிலையைத்தான் ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. வளர்ச்சிப்பணிகளில் மட்டுமல்ல... கலாச்சாரம், பாரம்பரியத்திலும் தமிழகம் முன்னோடி என நிரூபணம் ஆகி விடக்கூடாது என்பதற்காக கீழடியில் அவர்கள் நடத்திய அரசியல் மிக மோசமானது. கீழடியில் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் நாகரிகம் வெளிப்பட்டது.
இதனை வெளிக்கொணர்ந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை வேறு மாநிலத்திற்கு அதிரடியாக மாற்றியது ஒன்றிய அரசு. முதல் 2 அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் திருத்தம் கோரி திருப்பி அனுப்பியுள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், எஸ்ஐஆர் பணிகளில் மறைமுகமாக மூக்கை நுழைத்து தீவிரம் காட்டி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் கட்சிகள், விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மெட்ரோ ரயில் திட்டத்தை பொறுத்தவரை, கோவையில் 5 வழித்தடங்களில் முதற்கட்டமாக இரண்டு வழித்தடங்களில் ரூ.10,740 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம், மதுரையில் ரூ.11,360 கோடியில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை ஒரே வழித்தடத்தில் மெட்ரோ ரயில் தடத்திற்கு 936 பக்கங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என சாக்குப்போக்கு ெசால்லி தட்டி கழிக்கிறது ஒன்றிய அரசு. பாஜ ஆளும் மாநிலங்களில், சின்ன நகரங்களில் கூட செயல்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை, மதுரை, கோவைக்கு கொண்டு வரவே கூடாது என்ற ரீதியில் ஒன்றிய அரசு செயல்படுவதாகவும், எய்ம்ஸை போலவே மெட்ரோ ரயில் திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை கோரி அமைதி வழியில் போராட உள்ளதாகவும் தமிழக மக்கள் கூறி வருகின்றனர். வழக்கம்போல பாராமுகம் காட்டினால், தேர்தலில் பாடம் புகட்டவும் தயாராகி வருகின்றனர்.


