விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணங்கள் வசூலிக்காதது ஏன்?: சென்னை மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகள் அப்புறப்படுத்தாதது குறித்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் பிரகாஷ் கர்காவா அடங்கி அமர்வு, பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்துள்ள கழிவுகளை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி தவறிவிட்டதாக அதிருப்தி தெரிவித்தது. மேலும் பாதுகாப்பான, ஆபத்து இல்லாத பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சிலைகள் மட்டுமே கரைக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டிய தீர்ப்பாயம், சிலைகளை கரைப்பதற்கு ஏன் கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை என்ற கேள்வியையும் எழுப்பியது. கட்டணங்கள் வசூலித்தால் அந்த நிதியை கொண்டு, சிலை கரைப்புக்கு பிறகு, தூய்மைப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்தது.