புதுடெல்லி: கடந்த 2019ல் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இதில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற நிலையில், சிவ சேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கணிசமான சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி பாஜகவில் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்தனர். இதனால் சிவசேனா இரண்டாக உடைந்தது. பின்னர் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகிய நிலையில், ஷிண்டே தரப்புக்கே கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் கட்சி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கை விரைந்து பட்டியலிட்டு விசாரிக்க உத்தவ் தரப்பு வக்கீல் கோரினார். இதைஏற்று வழக்கை நவம்பர் 12ம் தேதி பட்டியலிடுவதாக நீதிபதிகள் உறுதியளித்தனர்.