Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

உச்சநீதிமன்றத் தீர்ப்பை நான் மனமார வரவேற்கிறேன்: செல்வப்பெருந்தகை!

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை நான் மனமார வரவேற்கிறேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; மாநில சட்டமன்றம் மக்கள் இறையாண்மையின் தூணாகவும், ஜனநாயகத்தின் உயிர்துடிப்பாகவும் விளங்குகிறது. அந்த உயரிய அமைப்பு நிறைவேற்றிய மசோதாக்களை, எந்தவொரு காரணமும் கூறாமல் ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு, இந்திய கூட்டாட்சித் தத்துவத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதாரக் கொள்கைகளையும் வலுவாக உறுதிப்படுத்துகிறது. மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படுத்தும் சட்டங்களையும் கொள்கைகளையும் தடுக்கும் வகையில் ஆளுநர் பதவியைப் பயன்படுத்துவது என்பது அரசியலமைப்பின் ஆன்மாவின் நோக்கத்துக்கு முழுமையாக முரண்படுவதாகும் என்பதை இன்றைய தீர்ப்பு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

சட்டமன்றத்தின் ஒவ்வொரு முடிவும் மக்களின் விருப்பத்தின் வெளிப்பாடே என்பதை இந்த தீர்ப்பு மறுபடியும் அனைவருக்கும் உணர்த்துகிறது. இந்த தீர்ப்பு மாநிலங்களின் உரிமை, மக்கள் ஆட்சியின் கண்ணியம் ஆகியவற்றை பாதுகாக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க முன்னோட்டமாகும். மாநில அரசின் செயல்பாடுகளை தாமதப்படுத்தும் அல்லது தடைசெய்யும் நோக்கத்துடன் ஆளுநர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதை உச்சநீதிமன்றம் முற்றிலும் தெளிவுபடுத்தியுள்ளது. இது சட்டமன்றத்தின் மதிப்பையும், மக்களின் தீர்மானத்தின் மேன்மையையும் உயர்த்தும் நீதியின் முழக்கமாக திகழ்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை நான் மனமார வரவேற்கிறேன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் எந்தவிதத் தடையும் இன்றி சட்டபூர்வமான முறையில் முன்னேற வேண்டும் என்ற நமது நிலைப்பாட்டுக்கு இன்று நீதிமன்றம் அளித்த உறுதிப்படுத்தல் மிகப் பெரும் பலமாகும். அரசியலமைப்பை மதிக்கும் பண்பும், கூட்டாட்சி மரபுகளைக் காக்கும் பொறுப்பும் அனைவராலும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதையும் இந்த தீர்ப்பு வலியுறுத்துகிறது. தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் அதிகாரம் பாதிக்கப்படாமல், சட்டமன்றத்தின் கண்ணியம் குறையாமல், ஜனநாயகத்தின் மதிப்பு நிலைக்க தகுந்த பாதையை இந்த தீர்ப்பு உருவாக்கியுள்ளது. மக்கள் நலனே முதன்மையானது என்ற உண்மையான அரசியலமைப்பு வழங்கிய உறுதி மொழியில், நாங்கள் தொடர்ந்து நிலைத்திருக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.