Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யார் ஆட்சி?

மக்களவை தேர்தலில் 5 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. வரும் 25ம் தேதி 6ம் கட்டமும் ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட தேர்தலும் நடக்கிறது. ஜூன் 4ம் தேதி நடக்கும் ஓட்டு எண்ணிக்கையின் போது யார் ஆட்சி என்பது தெரிந்து விடும். பிரதமர் மோடி தொடர்ந்து 3ம் முறையாக ஆட்சி அமைப்பாரா அல்லது இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமா என்பது அன்று முடிவாகும். ஆனால் 5 கட்ட தேர்தல் முடிவில் தற்போது 428 தொகுதிகளில் தேர்தல் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களே ஓரளவிற்கு அடுத்து யார் ஆட்சி என்பதை முடிவு செய்யும் ஒன்றாக உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இன்னும் 115 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற வேண்டும் என்பதால் அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் இனி மோடி பிரதமராக வரமுடியாது. பா.ஜவுக்கு எதிராக நாடு முழுவதும் அலை வீசுகிறது. இப்போது நடந்த தேர்தல் முடிவில் இந்தியா கூட்டணி அமோக இடங்களை கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடிக்கு எதிரான வெறுப்பு அலை வீசத்தொடங்கி உள்ளது. தற்போது உள்ள நிலவரப்படி இந்தியா கூட்டணி 350 தொகுதிகளுக்கு மேல் எளிதாக வென்றுவிடும். பிரதமர் மோடி பதவி விலக இன்னும் 15 நாட்கள் தான் உள்ளது என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் பிரதமர் மோடியும், பா.ஜவும் 400 பிளஸ் இடங்களில் பா.ஜ கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்து வருகிறார்கள்.

அதுவும் அமித்ஷா ஒருபடி மேலே சென்று இதுவரை நடந்த 428 தொகுதிகளில் மட்டும் பா.ஜ 310 தொகுதிகளில் வெல்லும். அடுத்து நடக்க இருக்கும் 2 கட்ட தேர்தல் முடிவில் 400க்கும் மேற்பட்ட இடங்களை பா.ஜ கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார். ஒவ்வொரு கட்ட தேர்தல் முடிந்த பிறகும் இரு கூட்டணி தலைவர்களும் தாங்கள் தான் அதிக இடங்களில் முன்னணியில் இருப்பதாக தெரிவித்து வருவது அவர்களது நம்பிக்கையை காட்டுகிறது. ஆனால் மக்களின் முடிவு நிச்சயம் ஜூன் 4ம் தேதி தெரிந்துவிடும்.

ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் வெறுப்பு பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியிருப்பதை தேர்தல் கமிஷன் எதைக்கொண்டு மறைக்கப்போகிறது என்பதுதான் தெரியவில்லை. அதிலும் உச்சமாக பிரதமர் மோடியே நேரடி மதரீதியாக பிரசாரம் செய்வது அனைத்து தரப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், ஒடிசாவில் பிரசாரம் செய்த அவர் கோயில் பொக்கிஷத்தின் சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டதாகவும், அதை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தவர்களை மன்னிப்பீர்களா என்று கேட்டும் பிரசாரம் செய்துள்ளார். தமிழ்நாட்டை அவமதிக்கும் பிரதமர் மோடியின் பேச்சு இந்த தேர்தல் முடியும் நேரத்தில் அனைத்து தரப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மோடியின் பிரசாரம் ஒருபக்கம் வெறுப்பை தூண்டும் வகையில் உள்ளது என்றால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிரசாரம் இன்னொரு பக்கம் மிரட்டும் வகையில் உள்ளது. ராகுல்காந்தி,கெஜ்ரிவாலுக்கு இந்தியாவில் ஆதரவு இல்லை. அவர்களுக்கு பாகிஸ்தானில் தான் ஆதரவு உள்ளது என்று இகழ்ந்து பேசியுள்ளார். அதோடு விடவில்லை. ஒடிசாவில் பிரசாரம் செய்த அவர், ஒடிசாவை மண்ணின் மைந்தன் ஆட்சி செய்ய வேண்டும் என்றால் பா.ஜவுக்கு வாக்களிக்க வேண்டும். பிஜூ ஜனதா தளத்திற்கு வாக்களித்தால் தமிழ்நாட்டு அதிகாரியான விகே பாண்டியன் ஆட்சி செய்வார். ஒடிசாவை தமிழர் ஆள வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளார். இதற்கெல்லாம் பதில் ஜூன் 4ம் தேதி தெரியும்.