Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யார் தோல்வி?

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு விட்டன. இனி இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் துணிய மாட்டார்கள். இப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என்று தீவிரவாதிகள் கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு மரண அடி அவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டது என்று பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சின் வேகம் குறைவதற்குள், இந்தியாவின் ஆன்மாவான தலைநகர் டெல்லியில் தாக்குதல் நடத்தி அதிர வைத்திருக்கிறார்கள் பயங்கரவாதிகள்.

வல்லபாய் படேலுக்கு பிறகு மிகப்பெரிய இரும்பு மனிதர், அவர் இல்லாமல் இந்தியாவில் எந்த அசைவும் நடக்காது, மிகப்பெரிய சாணக்கியர் என்றெல்லாம் போற்றப்பட்டு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, உளவுத்துறையில் உலகிலேயே நம்பர் 1 என்றும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சாணி என்றும் போற்றப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோர் இந்த தாக்குதல் பற்றி என்ன சொல்லப்போகிறார்கள்?. எதற்கெடுத்தாலும் காங்கிரஸ் ஆட்சியை பற்றியும், நாட்டின் முதல் பிரதமர் நேருவைப்பற்றியும் மட்டுமே குறை கூறி ஆட்சியை நடத்தி வரும் பிரதமர் மோடி என்ன பதில் சொல்லப்போகிறார்?. நாட்டின் மிகப்பெரிய தேசபக்தர்கள் என்று தங்களை மட்டுமே காட்டிக்கொள்ளும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் டெல்லி நகர வீதிக்குள், அதுவும் காலங்காலமாக பிரதமர்கள் தேசிய கொடி ஏற்றும் பாரம்பரியம் மிக்க செங்கோட்டை அருகே பயங்கர வெடிபொருட்களுடன் தீவிரவாதிகளை ஊடுருவ விட்டது எப்படி?.

மோடி பிரதமரான பிறகு இந்தியாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விட்டதாக பிரசாரம் செய்தார்களே? அது உண்மையா? பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு 2015 ஜம்முவில் மார்ச் 20ல் நடந்த தாக்குதலில் 6 பேரும், 2015 ஜூலை 27ல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் நடத்தப்பட்ட தாக்கதலில் 10 பேரும், 2016 ஜனவரி 2ஆம் தேதி பதன்கோட் விமான தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேரும், 2016 ஜூன் 25 அன்று ஜம்மு காஷ்மீர் பாம்போர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேரும், செப்.18 அன்று உரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 23 பேரும், அக்டோபர் 3ஆம் தேதி பாரமுல்லாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேரும், நவம்பர் 29 அன்று காஷ்மீர் நக்ரோட்டா ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேரும், 2017 ஜூலை 11 அன்று ஜம்மு அமர்நாத் யாத்திரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேரும், 2018 பிப்ரவரி 10ல் சன்ஜூவான் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேரும்,

2019 மார்ச் 7 அன்று ஜம்மு பஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேரும், ஜூன் 12 அன்று துணை ராணுவப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேரும், 2023 ரஜோரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேரும், 2024 ஜூன் 9 அன்று காஷ்மீர் ரியாசியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேரும், 2025 ஏப்ரல் 22 அன்று காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேரும் பலியாகி இருக்கிறார்களே, இதற்கு பதில் என்ன?. காஷ்மீர், பஞ்சாப் என்று எல்லையோரம் தாக்குதல் நடத்தினார்கள். இன்று தலைநகர் டெல்லியையே குறிவைத்து தாக்கியிருக்கிறார்கள். 12 உயிர்கள் பறிபோய் இருக்கிறது. இது மோடி, அமித்ஷாவின் தோல்வி இல்லையா? இந்த நாட்டில் அதீத இருமாப்புடன் வலம் வரும் தேச பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலின் தோல்வி இல்லையா? நமது நாட்டின் உளவுப்படையின் மிகப்பெரிய தோல்வி இல்லையா?. பலியான உயிர்களுக்கு பதில் சொல்வது யார்?.