வௌ்ளை மாளிகை சொல்லும்போது அதிபர் டிரம்ப்புடன் பேசுவதை மோடி ஏன் ஒப்பு கொள்ள மறுக்கிறார்? காங்கிரஸ் கேள்வி
புதுடெல்லி: “அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேசுவதை பிரதமர் மோடி ஏன் ஒப்பு கொள்ள மறுக்கிறார்?” என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “மே 10ம் தேதி மாலை 5.37 மணிக்கு அமெரிக்க வௌியுறவுத்துறை செயலாளரின் அறிவிப்பில் இருந்துதான் ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டது என்பதை இந்திய மக்கள் அறிந்து கொண்டனர்.
தற்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், பிரதமர் மோடியும் வர்த்தக ஒப்பந்தம் பற்றி அடிக்கடி பேசி கொண்டிருப்பதாக வௌ்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீட்டிடமிருந்து இந்திய மக்கள் தற்போது தெரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் உண்மையில் ஒருவருக்கொருவர் பேசி கொண்டிருக்க வேண்டும். ஆனால் பிரதமர் ஏன் அதை ஒப்பு கொள்ள மறுக்கிறார்? அவர் அதிபர் டிரம்ப்புடன் பேசுவதை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்? அவர் எதற்காக பயப்படுகிறார்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
