புதுடெல்லி: அமெரிக்க அதிபர் H-1B விசா கட்டணத்தில் அதிகப்படியான கட்டண உயர்வை சில நாட்களுக்கு முன்பு அறிவித்த நிலையில், மருத்துவர்களுக்கு புதிய கட்டணங்களிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து வெள்ளை மாளிகை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் குடியுரிமை பெறாத தொழிலாளர்களின் விசா மீதான கட்டுப்பாடு என்ற தலைப்பில் அமெரிக்க அதிபர் ஒரு அறிவிப்பை வெளிட்டார். இது H-1B விசா திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. H-1B விசா விண்ணப்பங்களில் $100,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம்)கட்டணத்தை விதிக்கப்பட்டது. இந்த புதிய கட்டணம் செப்டம்பர் 21, 2025 அன்று அதிகாலை 12.01 மணிக்கு அமலுக்கு வந்தது.
இந்த நிலையில் பல்வேறு நிறுவனங்கள் H-1B வைத்திருப்பவர்கள், தற்போது அமெரிக்காவிற்கு வெளியே உள்ள அவர்களது குடும்பத்தினர் உடனடியாக அமெரிக்க திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தினர். கட்டண உயர்வு தற்போதைய $2,000-5,000 வரம்பிலிருந்து ஒரு பெரிய உயர்வைக் குறிக்கிறது, இது தொடக்க நிறுவனங்கள், சிறு வணிகங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசா கட்டணம் உயர்வு காரணமாக இந்தியர்கள் உள்பட மற்ற நாட்டினர் அமெரிக்காவில் வேலை பார்க்கும் கனவு பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக விசா கட்டணம் உயர்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். இதனை அடுத்து , திறமையானவர்கள் பணிக்கு கிடைக்காமல் பொருளாதாரம் பாதிக்கப்படும் என அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் H-1B விசாவுக்கான புதிய கட்டணத்தில் இருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து வெள்ளை மாளிகை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.