‘விஸ்கி’ மீதான 150% இறக்குமதி வரி குறைப்பு: இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை: ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை
மும்பை: இந்தியா - இங்கிலாந்து இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான ‘ஸ்காட்ச் விஸ்கி’ மீதான வரி குறைப்பு அமலாக்கம் குறித்து விவாதிக்க இங்கிலாந்து பிரதமர் இந்தியா வந்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே கடந்தாண்டு ஜூலையில் ‘விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்’ கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக, இந்தியாவில் ‘ஸ்காட்ச் விஸ்கி’ மீது விதிக்கப்படும் 150 சதவீத இறக்குமதி வரியை உடனடியாக 75 சதவீதமாக குறைப்பதும், அடுத்த பத்தாண்டுகளில் படிப்படியாக 40 சதவீதமாகக் குறைப்பதும் ஆகும்.
இந்த ஒப்பந்தத்தால் ஸ்காட்லாந்தின் பொருளாதாரம் ஆண்டுக்கு 190 மில்லியன் பவுண்டுகள் வரை வளர்ச்சி அடையும் என இங்கிலாந்து அரசு கணித்துள்ளது. மேலும், கூடுதலாக 1 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஸ்காட்ச் விஸ்கி விற்பனையாகும் என்றும், இதன்மூலம் இங்கிலாந்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய விஸ்கி நுகர்வோர் சந்தையாக இந்தியா திகழ்வதால், இந்த ஒப்பந்தம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என ஸ்காட்ச் விஸ்கி சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அமலாக்கம் குறித்து ஆலோசிப்பதற்காக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இன்று மும்பை வந்தடைந்தார். அவரை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமர் மோடியை நாளை (அக். 9) மும்பையில் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு வர்த்தகத்தை 25.5 பில்லியன் பவுண்டுகளாக அதிகரிக்கும் நோக்கில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இறக்குமதி வரி குறைக்கப்பட்டாலும், மாநில அரசுகளால் விதிக்கப்படும் கலால் வரிகள் மற்றும் பிற உள்ளூர் வரிகள் அதிகம் இருப்பதால், நுகர்வோருக்கான சில்லறை விலையில் 8 முதல் 10 சதவீதம் மட்டுமே குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கெய்மரின் இந்த பயணத்தின்போது, தொழில்நுட்பம், பாதுகாப்பு, புத்தாக்கம் மற்றும் பருவநிலை உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ‘தொலைநோக்கு பார்வை 2035’ என்ற உத்திசார் திட்டத்தையும் இரு தலைவர்களும் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் விஸ்கி மட்டுமின்றி, கார்கள் மற்றும் ஸ்காட்லாந்தின் பிற உணவுப் பொருட்களின் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.