Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாலையை கடக்க முயன்றபோது சரக்கு ஆட்டோ மோதி பள்ளி மாணவன் பலி: தாய் கண்முன்னே பரிதாபம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே, அம்மாவை பைக்கில் ஏற்றி செல்ல சாலையை கடக்க முயன்றபோது, பள்ளி மாணவன் சரக்கு ஆட்டோ மோதி தாய் கண்முன்னே பரிதாபமாக பலியானார். கூடுவாஞ்சேரி அடுத்த, காயரம்பேடு ஊராட்சிக்குட்பட்ட மூலக்கழனி, அண்ணா சாலையை சேர்ந்தவர் பன்னீர் (43). இவர், தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி யசோதா (36), மகன் சந்தோஷ் (17), மகள் தன்சிகா (15) ஆகியோர் உள்ளனர். இதில், நந்திவரத்தில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் சந்தோஷ் 12ம் வகுப்பும், தன்சிகா 10ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாயும், மகனும் அங்குள்ள கோயிலுக்கு செல்வதற்காக நேற்று காலை வீட்டில் இருந்து கிளம்பினர். அப்போது, சந்தோஷின் தாய் மட்டும் மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். இதில், சந்தோஷ் தனது பைக்கை எடுத்துக்கொண்டு சாலை ஓரத்தில் நின்றிருந்த தாயை பைக்கில் ஏற்றி செல்வதற்காக சாலையை கடந்தார். அப்போது, கூடுவாஞ்சேரியில் இருந்து காயம்பேடு நோக்கி மின்னல் வேகத்தில் வந்த சரக்கு ஆட்டோ சந்தோஷ் மீது பயங்கரமாக மோதி ஏறி இறங்கியது. இதில், சந்தோஷ் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்தோஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து பூந்தமல்லியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.