Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டின் நிதி எங்கே? ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கோலம் போட்டு தமிழக மக்கள் எதிர்ப்பு : வீட்டுக்கு வீடு எழுந்த எதிர்ப்பு குரலால் பரபரப்பு

சென்னை: தமிழ்நாட்டின் நிதி எங்கே? இந்தியை திணிக்காதே என்று ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கோலம் போட்டு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் வீட்டுக்கு வீடு எழுந்த எதிர்ப்பு குரலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடியை இன்று வரை ஒதுக்கப்படவில்லை என்றும், மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் கல்வி நிதியை விடுவிப்பார்கள் என்றும் ஒன்றிய பாஜ அரசு கூறி வருவதாக தமிழக அரசு குற்றச்சாட்டு வைத்தது. இதற்கு பதில் அளித்த ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. அதனால் விதிகளின்படி எங்களால் நிதியை ஒதுக்க முடியாது’ என்று கூறியிருந்தார்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கான நிதி என்ற ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு அலைகளை எழுப்பியிருக்கிறது. மேலும், தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பாஜ தவிர அனைத்து கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று சொல்வது இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்றதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு, தமிழகத்துக்கான நிதியையும், நீதியையும் தர மறுப்பது நியாயமற்ற போக்கையே காட்டுகிறது என்ற எதிர்ப்பு குரல் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. இதற்கான அரசியல் கட்சியினர் மட்டுமல்ல பல்வேறு சமூக அமைப்புகளும் ஒன்றிய பாஜ அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட தொடங்கியுள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்த மூன்றாவதாக ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. இது மறைமுகமாக இந்தியைத் திணிப்பதற்கான ஒரு வழியாகவே மாநிலத்தில் பார்க்கப்படுகிறது. இந்தியை அரசுப் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக கற்றுக் கொடுக்கும் முயற்சிகளை பல ஆண்டுகளாகவே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது.

தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைக் குறிப்பிடும்போது, 1930களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும் 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமுமே பொதுவாக பேசப்பட்டாலும் தமிழ்நாட்டில் பல தருணங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வந்திருக்கின்றன. தற்போதும் தமிழ்நாட்டுக்கான நிதி எங்கே? என்று ஒன்றிய பாஜ அரசை எச்சரிக்கும் வகையில், இதற்கான போராட்டம் என்பது பல்வேறு வடிவங்களில் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக ஒலிக்க தொடங்கியுள்ளது.

குறிப்பாக ஒன்றிய பாஜ அரசின் செயல்பாடுகளை கண்டித்து நேற்று முன்தினம் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிரான போராட்டங்கள் வேகமெடுத்து வருகிறது. அதாவது ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றிய பாஜ அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக கோலம் போடும் போராட்டமாக பட்டி தொட்டி எங்கும் பரவி வருகிறது.

அதாவது சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் வீட்டுக்கு வீடு கோலம் போட்டு ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டின் நிதி எங்கே? இந்தியை திணிக்காதே.... இந்தி திணிப்பை நிறுத்து.... என்ற வார்த்தைகளுடன் சென்னையில் பல்வேறு வீடுகள் முன்பு கோலம் போடப்பட்டிருந்ததை பலர் வியப்புடன் பார்த்து சென்றனர்.

இந்த எதிர்ப்பு குரல் தமிழகம் முழுவதும் பரவியது. மாவட்டம் முதல் கிராமங்கள் வரை பல்வேறு வீடுகள் முன்பு ஒன்றிய பாஜ அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டின் நிதி எங்கே? என்ற கோல போராட்டம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் கல்வி விஷயத்தில் ஒன்றிய பாஜ அரசு விளையாட்டு காட்டுவது தமிழகத்தின் அரசியல் மாச்சர்யங்களை மறந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்ற ஒரு பெரிய போராட்டத்ைத சந்திக்க கூடும் என்பது சமூக ஆர்வலர்களின் குரலாக உள்ளது.