Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஜோலார்பேட்டையில் ரூ.16 கோடியில் தொடங்கிய ரயில்நிலைய நவீனமயமாக்கும் பணிகள் முடிவது எப்போது?

*இரண்டரை ஆண்டுகளாக பயணிகள் கடும் அவதி

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகும். சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மாநகரங்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களை இணைக்கும் ரயில் நிலையமாக ஜோலார்பேட்டை விளங்கி வருகிறது.

இந்த ரயில் நிலையம் மார்க்கமாக நாள்தோறும் சரக்கு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கிறது. தினசரி வியாபார ரீதியாகவும், பல்வேறு பணிகள் காரணமாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வழியாக கடக்கின்றனர்.

இதனால் பல கோடி ரூபாய் ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

எனவே இந்த ரயில் நிலையத்தை நவீனமயமாக்கவேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ க.தேவராஜி, திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரைக்கு மனுக்கள் அளித்தனர். அதன்பேரில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எம்பி சி.என்.அண்ணாதுரை அவ்வப்போது குரல் எழுப்பி வந்தார்.

அதன்பேரில் ஒன்றிய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின்கீழ் கடந்த 2023ம் ஆண்டு ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.16 கோடியில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை மேம்படுத்தவும் ரூ.7 கோடியில் திருப்பத்தூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தவும், ரூ.9 கோடியில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தை மேம்படுத்தவும் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

இதையொட்டி மாஸ்டர் பிளான்கள் உருவாக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர், பார்வை குறைபாடு உள்ளவர்கள் உள்ளிட்டோரின் தேவைகளையும் உள்ளடக்கி, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, காத்திருப்பு பகுதிகள், கழிப்பறை, லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர், இலவச வைபை ஆகியவற்றை உள்ளடக்கி திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் துவங்கியது. ஆனால் இந்த அனைத்தும் கடந்த இரண்டரை ஆண்டுகளாகியும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

இதுகுறித்து ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கூறுகையில், `சுமார் இரண்டரை ஆண்டுகளை கடந்தும் ரயில்வே கட்டிட பணிகள் எதுவும் முழுமை பெறாமல் இருந்து வருகிறது. புதிய கட்டிடம் மற்றும் பிளாட்பாரங்கள் அமைப்பதற்காக பழைய கட்டிடங்களும் பிளாட்பாரங்களும் உடைக்கப்பட்டது.

ஆனால் பணிகள் சரிவர நடக்காமல் மழை, வெயிலில் காத்திருந்து ரயில் பிடித்து செல்லும் நிலை தொடர்ந்து வருகிறது. மேலும் அடிப்படை வசதிகள் இல்லாததால் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும், டெண்டர் எடுத்தவர்களை உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தவேண்டும். விரைவில் முழு அளவில் நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.