Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாட்ஸ்அப் வழியாக எளிதாகும் தமிழ்நாடு அரசு சேவைகள்; ரேஷன் கார்டு முதல் பஸ் டிக்கெட் வரை எங்கிருந்தும் பெறலாம்: முதற்கட்டமாக 50 சேவைகளை வழங்க மெட்டாவுடன் ஒப்பந்தம்

சென்னை: வாட்ஸ்அப் வழியாக 50 தமிழ்நாடு அரசு சேவைகள் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு, பிறப்பு மற்றும் வருமானச் சான்றிதழ் பெறுவது, வரி செலுத்துவது, வணிக உரிமங்கள் பெறுவது, அரசு பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது உள்ளிட்ட 50 அரசு சேவைகளை விரைவில் வாட்ஸ்அப் மூலம் எங்கிருந்தும் எளிதாகப் பெற முடியும். இந்தப் புதிய முயற்சி மூலம் மக்களுக்கு அரசு சேவைகளை மிகவும் எளிமையாகவும் வசதியாகவும் வழங்க முடியும். இந்த சேவைகளை வழங்குவதற்காக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏஐ ) அடிப்படையிலான சாட்பாட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாட்பாட், பயனர்கள் தேடும் சேவைகளை வெளிப்புற இணையதளங்கள் அல்லது வேறு பயன்பாடுகளுக்கு திருப்பிவிடாமல், வாட்ஸ்அப்பிலேயே முழுமையாக வழங்க உதவும்.

எடுத்துக்காட்டாக, ஒரு சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டிய படிவங்களை நிரப்புவது, ஆவணங்களை பதிவேற்றுவது, சான்றிதழ்களை PDF வடிவில் பதிவிறக்கம் செய்வது ஆகியவை அனைத்தையும் வாட்ஸ்அப்பிலேயே செய்ய முடியும். கூடுதலாக, இந்த சேவைகளுக்கான கட்டணத்தை வாட்ஸ்அப்பின் சொந்த கட்டண வசதி மூலமாகவோ அல்லது மற்ற டிஜிட்டல் கட்டண முறைகள் மூலமாகவோ செலுத்தலாம். இந்த சாட்பாட் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரையாடி, வாட்ஸ்அப்பின் ‘ஃப்ளோ’ அம்சத்தைப் பயன்படுத்தி பயனர்களை பொருத்தமான சேவைகளுக்கு வழிநடத்தும். மக்களின் கோரிக்கைகளைப் புரிந்து கொள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை இந்த வாட்ஸ்அப் அடிப்படையிலான மின்னாளுமை சேவையை அடுத்த மூன்று மாதங்களில் தொடங்க உள்ளது.

இந்தத் திட்டத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்த சேவையை அறிமுகப்படுத்துவதற்கு முன், தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை, மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது. மேலும், OTP அங்கீகாரம் உள்ளிட்ட பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பயனர்களின் தரவு பாதுகாக்கப்படும். இந்த சேவைகள் குறைந்தபட்சம் 13 அரசு துறைகளை உள்ளடக்கும் மேலும் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி வாட்ஸ்அப் எண்கள் ஒதுக்கப்படலாம். பயனர்களின் ஈடுபாட்டை மதிப்பிடுவதற்கு அவர்களின் பயன்பாட்டு முறைகள் ஆய்வு செய்யப்படும். மேலும். நிர்வாகத்திற்காக ஒரு டாஷ்போர்டு மூலம் சேவைகள் கண்காணிக்கப்படும். முதல் கட்டமாக, அடுத்த மூன்று மாதங்களில் 50 சேவைகளை வாட்ஸ்அப் மூலம் வழங்க தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை திட்டமிட்டுள்ளது.

அதன் பிறகு, மேலும் 50 சேவைகளை இரண்டு கட்டங்களாக சேர்க்க உள்ளது. முதல் கட்டத்தில் மொத்தம் 100 சேவைகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ள இம்முகாமை, இறுதியாக தமிழ்நாட்டில் உள்ள மின்சேவை மையங்களில் வழங்கப்படும் 34,843 சேவைகளையும் வாட்ஸ்அப் தளத்தில் கிடைக்கச் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய முயற்சி, அரசு சேவைகளை மக்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் கிடைக்கச் செய்யும். வாட்ஸ்அப் மூலம் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் இந்த சேவைகளைப் பெற முடியும் என்பதால், மக்கள் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்த முடியும். மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இயங்கும் இந்த சாட்பாட் மூலம், அனைத்து தரப்பு மக்களும் இந்த சேவைகளை எளிதாகப் பயன்படுத்த முடியும். இது அரசு சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக்குவதற்கு ஒரு முக்கிய முன்னெடுப்பாக அமையும்.

கிடைக்கும் சேவைகள்...

ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், உறுப்பினர்களை சேர்ப்பது அல்லது நீக்குவது பிறப்பு, வருமானம், முதல் பட்டதாரி, வசிப்பிடம், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்கள் நீர் மற்றும் சொத்து வரி செலுத்துதல், உரிமையியல் சான்றிதழைப் பார்ப்பது மற்றும் பதிவிறக்கம் செய்வது வழிகாட்டு மதிப்பு அறிதல், மின்கட்டணம் செலுத்துதல் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் படகு இல்லங்களை முன்பதிவு செய்வது விண்ணப்பங்களின் நிலையை சரிபார்த்தல்