பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 202 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி: 2-1 என தொடரையும் கைப்பற்றியது
தரூபா: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது. இதில் முதலில் நடந்த 3 போட்டி கொண்ட டி.20 தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றிய நிலையில், 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2வது போட்டியில் வெஸ்ட்இ்ண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. இதையடுத்து தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்றிரவு தரூபா ஸ்டேடியத்தில் நடந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் 5 ரன்னில் வெளியேற எவின் லூயிஸ் 37 ரன் அடித்தார். பின்னர் வந்த கீசி கார்டி 17, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 15, ரோஸ்டன் சேஸ் 36, குடகேஷ் மோதி 5 ரன்னில் அவுட் ஆகினர். சதம் விளாசிய கேப்டன் ஷாய் ஹோப் 120 ரன்(94பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) ஜஸ்டின் க்ரீவ்ஸ் 43 ரன் (24பந்து) அடித்து நாட்அவுட்டாக இருந்தனர். 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு வெஸ்ட்இண்டீஸ் 294 ரன் எடுத்தது. பாகிஸ்தான் பவுலிங்சில் நசீம் ஷா , அப்ரார் அகமது தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் 295 ரன் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி ஜெய்டன் சீல்ஸ் வேகத்தில் ஆட்டம் கண்டது. தொடக்க வீரர்கள் சைம் அயூப், அப்துல்லா ஷபீக் டக்அவுட் ஆக பின்னர் வந்த பாபர் அசாம் 9 ரன்னுக்கு நடையை கட்டினார். கேப்டன் முகமது ரிஸ்வான் கோல்டன் டக் (முதல் பந்திலேயே போல்ட்) ஆனார். அதிகபட்சமாக சல்மான் ஆகா 30, முகமது நவாஸ் நாட் அவுட்டாக 23 ரன் அடித்தனர். 29.2 ஓவரில் 92 ரன்னுக்கு பாகிஸ்தான் ஆல்அவுட் ஆனது. இதனால் 202 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றிபெற்று 2-1 என தொடரையும் கைப்பற்றியது. அந்த அணியின் பவுலிங்கில் ஜெய்டன் சீல்ஸ் 7.2 ஓவரில் 18 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். கேப்டன் ஷாய் ஹோப் ஆட்டநாயகன் விருதும், ஜெய்டன் சீல்ஸ் (3 போட்டியில் 10 விக்கெட்) தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.