புதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று டெல்லியில் தொடங்குகிறது. இப்போட்டியில் வென்று ஒயிட்வாஷ் செய்ய இந்திய அணி களமிறங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட்டில் ஆடுகிறது. அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. 2வது மற்றும் கடைசி டெஸ்ட், புதுடெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் வலுவாக உள்ளது. கேப்டன் சுப்மன்கில், கே.எல்.ராகுல் சூப்பர் பார்மில் உள்ளனர்.
விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல், ஜடேஜா ஆகியோரும் முதல் டெஸ்ட்டில் சதம் விளாசினர். குறிப்பாக ஜடேஜா, பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்தினார். தமிழக வீரர் சாய்சுதர்சன் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த டெஸ்ட்டில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, பிரசித் கிருஷ்ணா இடம்பெறக்கூடும் என தெரிகிறது. மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது. மறுபுறம் வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பி வருகிறது. முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 44.1 ஓவரிலும், 2வது இன்னிங்சில 45.1 ஓவரிலும் ஆல்அவுட் ஆனது.
பேட்டிங்கில் கேப்டன் ரோஸ்டன் சேஸ், ஷாய் ஹோப், பிராண்டன் கிங் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால் தான் இந்தியாவுக்கு சவால் கொடுக்க முடியும். பவுலிங்கில் சொல்லிக்கொள்ளும்படி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் யாரும் இல்லை. இந்த டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றி பெற்று ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் களம் இறங்குகிறது. அகமதாபாத் டெஸ்ட் இரண்டரை நாளில் முடிந்து விட்டது. இந்தியாவுக்கு சவால் கொடுக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் இல்லாததால் போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் முதல் டெஸ்ட்டில் மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது. இதன் காரணமாக 2வது டெஸ்ட் நடக்கும் டெல்லி மைதானத்தில் பேட்டிங்கிற்கு சாதக மான ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் 3 நாள் பேட்டிங்கிற்கும், கடைசி 2 நாள் சுழற்பந்துவீச்சுக்கும் ஆடுகளம் சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.