சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 29ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையில் பெரியதாக மாற்றம் இல்லை என்றாலும், ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. தமிழக மலைப் பகுதிகளில் இயல்பை ஒட்டி சற்று குறைவாகவும் இருந்தது. அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. கரூர், தூத்துக்குடி மாவட்டங்களில் 3 டிகிரி வரையும் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், வங்கக் கடலில் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலை கொண்டுள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் நேற்று கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் அங்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.