சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 8ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியிலும் லேசான மழை பெய்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து நேற்று மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டது. பின்னர் அது வடக்கு ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டு ஒடிசா வழியாக மேற்கு நோக்கி பயணித்தது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நேற்ற ஓரிரு இடங்களில் மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 8ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மேலும், 5ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை உயர்ந்து காணப்படும்.