நண்பருடன் இரவு உணவிற்கு சென்ற போது கொடூரம்; மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவி கும்பலால் கூட்டு பலாத்காரம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஒடிசாவை சேர்ந்த மருத்துவ மாணவி கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பஸ்சிம் பர்தாமன் மாவட்டத்தின் துர்காபூரில் தனியார் மருத்துவ கல்லூரி இயங்கி வருகின்றது. இந்த கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படிக்கும் ஒடிசாவை சேர்ந்த மருத்துவ மாணவி தனது நண்பருடன் இரவு உணவிற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது.
இந்த கும்பலை பார்த்தவுடன் மருத்துவ மாணவியுடன் வந்த நண்பர் அவரை தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டதாக தெரிகின்றது. மாணவியிடம் இருந்த செல்போனை பறித்த கும்பல் அவரை வளாகத்திற்கு வெளியே காட்டுப்பகுதிக்குள் இழுத்துச்சென்றுள்ளனர். அங்கு அந்த கும்பல் மாணவியை அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வெளியே கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கும்பல் மாணவியை மிரட்டியுள்ளது.
அதன் பின் அங்கிருந்து வந்த மாணவி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மேற்கு வங்கத்துக்கு விரைந்தனர். தனது மகள் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் அவர்கள் புகாரளித்துள்ளனர். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். முதல்கட்டமாக மாணவியுடன் வந்த நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கண்டறிவதற்கு போலீசார் முயற்சித்து வருகிறார்கள். இதனிடையே மாநில சுகாதாரத் துறையானது துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியிடம் இது குறித்து அறிக்கை கோரியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.