Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

மேற்கு வங்கத்தில் பரபரப்பு எஸ்ஐஆர் பணிச் சுமையால் பிஎல்ஓ தூக்கிட்டு தற்கொலை: தேர்தல் ஆணையம் மீது மம்தா தாக்கு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிச் சுமையால் மன அழுத்தமடைந்த வாக்காளர் நிலை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள ரங்கமதி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூத்தின் பிஎல்ஓ 48 வயதான சாந்திமுனி ஓராவ் தனது வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அங்கன்வாடி பணியாளரான அவர் எஸ்ஐஆர் பணி தொடங்கியதில் இருந்து கடுமையான பணிச்சுமையால் அவதிப்பட்டு வந்ததாக அவரது குடும்பத்தினர் கூறி உள்ளனர். இந்த மன உளைச்சல் தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில், ‘‘மற்றொரு பிஎல்ஓ மரணத்தால் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறேன். எஸ்ஐஆர் செயல்முறை தொடங்கியதில் இருந்து 28 பேர் இறந்துள்ளனர். இதற்கு முன் 3 ஆண்டுகள் நடந்த இப்பணியை அரசியல் எஜமானர்களை மகிழ்விக்க தேர்தல் ஆணையம் 2 மாதத்திற்குள் முடிக்க கட்டாயப்படுத்துகிறது. இதனால் பிஎல்ஓ போன்ற களப்பணியாளர்களுக்கு மனிதாபிமானமற்ற அழுத்தம் தரப்படுகிறது. இடைவிடாத பணிச்சுமையால் அவர்களின் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகின்றன. உயிர்களை காக்க உடனடியாக எஸ்ஐஆர் பணிகளை நிறுத்த வேண்டும்’’ என்றார்.