எஸ்ஐஆரை எதிர்த்து மேற்கு வங்கத்தில் பேரணி தகுதியான ஒரு வாக்காளரை நீக்கினாலும் மோடி அரசு கவிழும்: முதல்வர் மம்தா அதிரடி
கொல்கத்தா: தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப்பிரேதசம், குஜராத், புதுச்சேரி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், கோவா, கேரளா, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவு, மபி ஆகிய 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கின. தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் இந்த சிறப்பு தீவிர திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நேற்று பிரமாண்ட எதிர்ப்பு பேரணியை நடத்தினார். கொல்கத்தாவின் தர்மதாலாவிலிருந்து பிற்பகல் 2 மணி அளவில் தொடங்கிய இப்பேரணி ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான ஜோராசங்கோ வரை நடந்தது. பேரணியில் மம்தாவுடன், திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும் மம்தாவின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி பங்கேற்றார். சாலையின் இருபுறமும் மக்கள் குவிந்து மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பேரணியை தொடர்ந்து மம்தா பானர்ஜி பேசியதாவது: கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜ எஸ்ஐஆரை நடத்துகிறது. ஆனால், பாஜ ஆளும் அசாம், திரிபுரா மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் நடத்தவில்லை. ஏன் இந்த பாரபட்சம்? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாக்காளர்களை அழிக்க நடக்கும் சதி இது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக அமைதியான கண்ணுக்கு தெரியாத மோசடி இது.
மேற்கு வங்கத்தில் ஒரு உண்மையான வாக்காளரின் பெயர் கூட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், மத்தியில் பாஜ அரசு ஆட்டம் காணும்.
அதன் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகி விடும். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து கிட்டத்தட்ட 2 கோடி வாக்காளர்களை நீக்க பாஜக சதி செய்துள்ளது. அவர்கள் 2 கோடி பெயர்களை நீக்கி, மக்களை வங்கதேசத்திற்கு நாடு கடத்தலாம் அல்லது தடுப்பு முகாம்களில் தள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இது அவர்களின் திட்டம். வங்கதேசத்தவர்களையும், ரோஹிங்கியாக்களையும் வெளியேற்றுவோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பீகாரில் எஸ்ஐஆருக்குப் பிறகு எத்தனை ரோஹிங்கியாக்களைக் கண்டுபிடித்தார்கள்? வங்காள மொழி பேசுவது மட்டும் ஒருவரை வங்கதேசத்தவர் ஆக்காது. உருது மொழி பேசுவது ஒருவரை பாகிஸ்தானியர் ஆக்காது. மேற்கு வங்கத்தின் அடையாளத்தை இப்படி அவமதிக்க முடியாது.
நான் வீட்டில் பிறந்தேன், மருத்துவமனையில் அல்ல. 7 முறை எம்பியாகவும், 3 முறை முதல்வராகவும், 4 முறை ஒன்றிய அமைச்சராகவும் இருந்திருக்கிறேன். இதன் பிறகும் எனது குடியுரிமையை நிரூபிக்க வேண்டுமா? 2026ல் தேர்தல் நடக்க உள்ள 4 மாநிலங்களில் 10 கோடி மக்களை எவ்வாறு சந்தித்து 3 மாதங்களில் படிவங்களை சேகரிக்க முடியும்? கடந்த முறை எஸ்ஐஆர் நடத்தி முடிக்க 2 ஆண்டுகள் ஆனது. எஸ்ஐஆரால் ஏற்பட்ட பீதியால் மேற்கு வங்கத்தில் கடந்த 7 நாளில் 7 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இந்த குழப்பத்திற்குப் பின்னால் பாஜ உள்ளது. அவர்கள் பரப்பும் பயத்தால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இது பணமதிப்பிழப்புக்கு இணையான ஒரு கொடூரம். இது மேற்கு வங்கத்தை பற்றிய பிரச்னை மட்டுமல்ல. இந்தியாவின் ஆன்மாவான வாக்களிக்கும் உரிமை பற்றியது. இதை எதிர்த்து மேற்கு வங்கத்திலும், தேவைப்பட்டால் டெல்லியிலும் போராடுவோம் என்றார்.
