பெஹராம்பூர்: மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹுமாயூன் கபீர். இவர் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிச.6ம் தேதி மேற்கு வங்கம்,முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். இதை தொடர்ந்து ஹீமாயுன் கபீரை கட்சியில் இருந்து நீக்கி திரிணாமுல் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில், பாபர் மசூதி கட்டுவதற்கு நிதி குவிந்து வருகிறது. நிதி திரட்ட நன்கொடை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் 4 பெட்டிகள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.37.33 லட்சம் கிடைத்துள்ளது. ஆன்லைன் பங்களிப்பு மூலம் ரூ.93 லட்சம் வந்துள்ளன. இதன் மூலம் நேற்று வரை மொத்தம் 1.30 கோடி கிடைத்துள்ளது. மேலும் சீல் வைக்கப்பட்ட 7 நன்கொடை பெட்டிகள் இன்னும் திறக்கப்பட்டு விரைவில் பணம் எண்ணப்படும் என்று கபீரின் உதவியாளர்கள் தெரிவித்தனர். எம்எல்ஏ ஹூமாயுன் கபீர் வரும் 22ம் தேதி புதிய அரசியல் கட்சியை தொடங்க போவதாக அறிவித்துள்ளார். மேலும் அடுத்தாண்டு நடக்கும் பேரவை தேர்தலில் 135 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக கூறினார்.
+
Advertisement


