பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: 2019க்கு பின் முதல் வெற்றியை ருசித்தது
தரூபா: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த 3 போட்டி கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என கைப்பற்றியது. அடுத்ததாக 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்ற நிலையில் 2வது போட்டி நேற்றிரவு தரூபாவில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. மழை குறுக்கீடு காரணமாக 37 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது. ஹசன் நவாஸ் நாட் அவுட்டாக 36, ஹுசைன் தலாத் 31, அப்துல்லா ஷபீக் 26, சைம் அயூப் 23, கேப்டன் முகமது ரிஸ்வான் 16 ரன் அடிக்கபாபர் அசாம் டக்அவுட் ஆனார். வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 35 ஓவரில் 181 ரன் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிராண்டன் கிங் 1, லீவிஸ் 7, கீசி கார்டி 16, கேப்டன் ஷாய் ஹோப் 32, ஷெர்பேன் ரூதர்போர்ட் 45 ரன்னில் அவுட் ஆகினர். ரோஸ்டன் சேஸ் நாட் அவுட்டாக 49, ஜஸ்டின் கிரீவ்ஸ் 26 ரன் அடித்தனர். 33.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2019ம் ஆண்டுக்கு பின் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வெஸ்ட்இண்டீஸ் வென்றுள்ளது. ரோஸ்டன் சேஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 1-1 என தொடர் சமனில் இருக்க 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்குதொடங்கிநடைபெற உள்ளது.