Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை, நிலச்சரிவு: 20 பேர் பலி, ஏராளமானோர் காயம்

டார்ஜிலிங்: மேற்குவங்கத்தின் டார்ஜிலிங்கில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.  மேற்குவங்க மாநிலத்தில் வடக்கில் இமயமலை பகுதிக்குள்பட்ட டார்ஜிலிங், கலிம்போங், கூச்பெஹார், ஜல்பைகுரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. டார்ஜிலிங்கில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கின. கனமழை காரணமாக டார்ஜிலிங் சதர், மிரிக், சுகியா போகாரி, ஜோர்பங்லோ, புல்பஜார் ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கி உள்ளது. மேற்குவங்கத்தையும், சிக்கிமையும் இணைக்கும் சாலைகள் மற்றும் டார்ஜிலிங் சிலிகுரியை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்த பகுதிகளுக்கான இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. ஏராளமானோர் நிலச்சரிவுகளில் சிக்கி உள்ளனர்.

உள்ளூர் காவல்துறையினர், மாவட்ட நிர்வாகம், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை கனமழை, நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியாகி விட்டனர். ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சபபடுகிறது. மேலும் சிலர் மாயமாகி உள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியும், மாயமானவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. நவராத்திரி விடுமுறையை கொண்டாடுவதற்காக டார்ஜிலிங் சென்றுள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் வௌியேற முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். நிலச்சரிவு காரணமாக டார்ஜிலிங்கில் உள்ள டைகர் ஹில், ராக் கார்டன் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது.

* ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

டார்ஜிலிங்கில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தன் எக்ஸ் பதிவில், “டார்ஜிலிங்கில் உயிரிழந்தவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். மீட்பு பணிகள் வெற்றிகரமாக நடக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “டார்ஜிலிங்கில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க கடமைப்பட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.